search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரியில் ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் - அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்
    X

    கன்னியாகுமரியில் ரூ. 37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் - அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்

    • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
    • ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்து உள்ளது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வருடத்துக்கு 75 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்து உள்ளது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பி பாறைகளின் தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவுகளை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப்பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் இந்த கண்ணாடி கூண்டு பாலப்பணியின் தொடக்க விழா இன்று காலை விவேகானந்தர் பாறையில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விவேகானந்தர் நினைவு மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    முன்னதாக விவேகானந்தர் பாறையில் ரூ.7 கோடி செலவில் கூடுதல் படகு கட்டும் தளம் அமைக்கும் பணியையும் அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட கலெக் டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ் ராஜன், ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம், கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் மற்றும் நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×