search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தற்கொலை செய்த காதலியின் உடலை போலீசுக்கு பயந்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசினேன்- கைதான காதலன் வாக்குமூலம்
    X

    தற்கொலை செய்த காதலியின் உடலை போலீசுக்கு பயந்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசினேன்- கைதான காதலன் வாக்குமூலம்

    • டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
    • செல்போன் மூலம் துப்பு துலக்கியபோது லோகேஷ் அடிக்கடி ஸ்வேதாவிடம் பேசியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் லோகேஷை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி மஞ்சுளாதேவி. இவர்களது மகள் ஸ்வேதா (21). இவர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 28-ந்தேதி வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவி மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து மாணவியின் தாய் மஞ்சுளாதேவி கோபிசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 20 கி.மீட்டர் தூரத்தில் உள்ள டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

    இதுபற்றி தெரியவந்ததும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை மீட்டனர். அப்போது அதில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில் பிணமாக கிடந்தது மாயமான கல்லூரி மாணவி ஸ்வேதா என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் பெற்றோரை வரவழைத்து உறுதி செய்தனர்.

    மேலும் மாணவியை தெரிந்த நபர்கள் யாரோ அழைத்து வந்து அவரை கொலை செய்து கிணற்றில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே மாணவி சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மாணவியிடம் அடிக்கடி செல்போனில் பேசிய கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வைதேகி-வீறுச்சாமி ஆகியோரின் மகன் லோகேஷ் (23) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்தான் மாணவியின் உடலை கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டி வீசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். போலீசில் லோகேஷ் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    ஸ்வேதா கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும்போது நான் அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்தேன். அப்போது எங்களுக்கிடையே காதல் ஏற்பட்டது. நான் தற்போது கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன்.

    நாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். இதில் ஸ்வேதா கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து ஸ்வேதா என்னிடம் வீட்டுக்கு தெரிந்தால் விபரீதம் ஆகி விடும் என்று கூறி என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். நானும் இந்த விஷயம் எங்கள் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சினை ஆகி விடும் என்று கூறி ஸ்வேதாவை திருமணம் செய்து கொள்வதாக காலம் தாழ்த்தி வந்தேன்.

    ஸ்வேதா 4 மாத கர்ப்பிணியாக இருந்ததால் வீட்டில் வாந்தி எடுத்துள்ளார். இதனால் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் பிரச்சினை ஆகி விடும் என்று கருவை கலைக்க முடிவு செய்தோம்.

    அதன்படி கடந்த 28-ந்தேதி காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு ஸ்வேதா கோபிசெட்டிபாளையம் வந்தார். பின்னர் நாங்கள் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றோம். அங்கு ஸ்வேதாவை பரிசோதனை செய்த டாக்டர் 4 மாத கருவாக இருப்பதால் கருவை கலைக்க முடியாது என்று கூறி விட்டனர். இதைக்கேட்டு மனம் உடைந்த ஸ்வேதா என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பினார். இதையடுத்து நான் கோவையில் இருந்து கொங்கர்பாளையத்தில் உள்ள எனது பாட்டி வீட்டிற்கு ஸ்வேதாவை அழைத்து சென்றேன்.

    அப்போது மாலை 5 மணி அளவில் அவரது பெற்றோர் தொடர்பு கொண்டபோது ஸ்வேதா நான் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வந்து விட்டேன். வீட்டிற்கு வந்து விடுகிறேன் என்று கூறினார். அந்த நேரத்தில் ஸ்வேதாவிடம் உணவு வாங்கி கொண்டு வருவதாக கூறி விட்டு வெளியே சென்றேன்.

    பின்னர் மீண்டும் வந்தபோது ஸ்வேதா தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நான் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பம் அடைந்தேன். இதுபற்றி வெளியே தெரிந்தால் போலீசார் என்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்து ஒரு சாக்கு மூட்டையில் ஸ்வேதாவின் கை, கால்களை கட்டி இரவு 9 மணி அளவில் யாரும் இல்லாத நேரத்தில் கிணற்றில் வீசி விட்டு வந்து விட்டேன்.

    செல்போன் மூலம் துப்பு துலக்கியபோது நான் அடிக்கடி ஸ்வேதாவிடம் பேசியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் என்னை கைது செய்தனர்.

    இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலமாக அளித்துள்ளார்.

    இதையடுத்து போலீசார் லோகேஷை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×