search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்
    X

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் விடிய, விடிய காத்திருப்பு போராட்டம்

    • கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276- ரத்து செய்ய வேண்டும்.
    • காஞ்சிகோயில் கருங்கரடு என்ற இடம் அருகே செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணிகள் நடந்தது.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையின் மூலமாக கீழ் பவானி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் பெரிய பாசனமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது.

    கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாக பிரிந்து எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் இப்பிரச்சனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276- ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமான பணிகளை மட்டுமே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பாசன விவசாய பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்நிலையில் காஞ்சிகோயில் கருங்கரடு என்ற இடம் அருகே செல்லும் கீழ்பவானி பிரதான வாய்க்காலுக்குள் சீரமைப்பு பணிகள் நடந்தது. பொதுப் பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் வாய்க்கால் சீரமைப்பு ஒப்பந்ததாரர்கள் எந்திரங்களை கொண்டு வாய்க்கால் கரையில் உள்ள மண்ணை அகற்றி உள்ளனர்.

    இதைப்பற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் ஆத்திரம் அடைந்தனர். கீழ்பவானி வாய்க்கால் கரையை பலப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கருங்கரடுவில் ஒன்று திரண்டனர். பின்னர் அங்குள்ள வாய்க்காலுக்குள் இறங்கி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து பெருந்துறை தாசில்தார் பூபதி, பெருந்துறை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் உள்பட பல்வேறு அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் நல்ல நிலையில் இருந்த கால்வாயில் கரையை உடைத்த பகுதியை மீண்டும் அதை மண்ணை கொண்டு பலப்படுத்த வேண்டும் அமைக்க கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். எனினும் இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த காத்திருப்பு போராட்டம் இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருந்துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×