என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வில் சேர இளைஞர்களுக்கு அதிக ஆர்வம்- செல்லூர் ராஜூ பேட்டி
- அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
- அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லை. இங்கு கடைகோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும்.
மதுரை:
அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான உறுப்பினர் படிவம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ புதிய உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கின்ற இயக்கமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, பிறகு 3-வது தலைமுறையாக பொதுச் செயலாளர் எடப்பாடியார் பொறுப்பேற்று கட்சியை வலுவோடும், பொலிவோடும் நடத்தி வருகிறார்.
அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் இல்லை. இங்கு கடைகோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.. சாதாரண தொண்டன் கூட அமைச்சராக, முதலமைச்சராக உயர முடியும் என்பதற்கு அ.தி.மு.க.வே சாட்சியாகும்.
எனவேதான் இந்த இயக்கத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் வருகிறார்கள். மதுரை மாநகரில் கூடுதலாக லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்துள்ளோம்.
தி.மு.க. குடும்ப கட்சி. அங்கு உழைப்புக்கு மரியாதை இருக்காது. கருணாநிதியின் வாரிசு களுக்கு தான் பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கும். எனவே இளைஞர்கள் அ.தி.மு.க. பக்கம் அணிவகுத்து வர தொடங்கி விட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மீது அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக தி.மு.க. அரசு மருத்துவக் கல்லூரி கட்டியதில் முறைகேடு என்று பொய்யாக ஜோடித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
மேலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மடிக்கணினி திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் போன்றவற்றை நிறுத்தி விட்டனர். தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என தெரிவித்து விட்டு தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அறிவித்து பெண்களை தி.மு.க. அரசு ஏமாற்றி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.






