search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தண்டவாளத்தின் குறுக்கே மழைநீர் வடிகால் பணிகள்:  கடற்கரை மின்சார ரெயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்படும்
    X

    தண்டவாளத்தின் குறுக்கே மழைநீர் வடிகால் பணிகள்: கடற்கரை மின்சார ரெயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்படும்

    • தண்டவாள பகுதிகளில் ராட்சத கிரேன் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • பணிகள் தொடங்கிய பிறகே ரெயில் சேவையில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்கிற முழுமையான தகவல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் மழைக்காலங்களில் வெள்ளம் தேங்குவதை தடுப்பதற்காக வெள்ளத் தடுப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதே நேரத்தில் ரெயில் நிலைய பாலங்களையொட்டிய பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட பிரச்சனைகளால் மழைநீர் வடிகால் பணிகளை முடிப்பதில் சவால்கள் இருந்து வந்தன. ரெயில்வே தண்டவாளங்களின் குறுக்கே மழைநீர் செல்லும் வகையில் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக திட்டமிடப்பட்டிருந்தது.

    இதற்காக 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அடையாளம் காணப்பட்டன. இந்த இடங்களில் தண்டவாளத்துக்கு கீழே மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வது எப்படி? என்கிற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த பணிகளை தொடங்குவதற்கு ரெயில்வே நிர்வாகத்துடன் உரிய முன் அனுமதி பெற வேண்டியது இருந்ததால் அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் அரசு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ரெயில்வே நிர்வாகத்துடன் பேசி தண்டவாளத்துக்கு கீழ் மழைநீர் வடிகால் பணிகளை அமைப்பது தொடர்பான அனுமதியை கேட்டுப்பெற்றுள்ளனர்.

    இதன்படி எழும்பூர் மற்றும் கணேசபுரம் ஆகிய பகுதிகளில் தண்டவாளத்தின் ஒருபுறத்தில் இருந்து இன்னொரு புறத்திற்கு மழைநீரை கொண்டு செல்வதற்கான வடிகால் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

    இந்த பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் செயலர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகால் அமைக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். இதை தொடர்ந்து இந்த பணிகள் தொடங்கி தொடர்ச்சியாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.

    எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள காந்தி இர்வின் சாலை பாலம் பகுதியில் தண்டவாளத்தின் குறுக்கே மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கும் பகுதியில் சுற்றியுள்ள இடங்களில் பணிகள் 90 சதவீத அளவுக்கு முடிவடைந்துள்ளன. தண்டவாளத்தின் குறுக்கே சுமார் 50 மீட்டரில் தூர்வாரும் கால்வாய் அமைக்கப்பட வேண்டும்.

    இந்த பணிகள் இன்னும் சில தினங்களில் தொடங்கப்பட வாய்ப்பு உள்ளது. மழை வெள்ளப் பாதிப்பை தடுக்க கட் மற்றும் கவர் என்கிற தொழில்நுட்ப முறையில் வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மழைநீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காணப்படும்.

    இதற்காக தண்டவாள பகுதிகளில் ராட்சத கிரேன் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் கடற்கரை மின்சார ரெயில் சேவையில் கடும் பாதிப்பு ஏற்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    கடற்கரையில் இருந்து இயக்கப்படும் மின்சார ரெயில்கள் பணிகள் தொடங்கி முடியும் வரை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எழும்பூர் முதல் சென்னை கடற்கரை வரை மின்சாரம் ரெயில் சேவை தடைபட உள்ளது.

    அதே போன்று எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகமும் குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ரெயில்கள் புறப்படும் நேரத்தில் 6 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படும்.

    இதே போன்று கணேச புரம் பகுதியிலும் தண்டவாளத்தின் குறுக்கே மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் அப்பகுதியிலும் ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டு ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட உள்ளது.

    புறநகர் ரெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையும் தடைபட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இருப்பினும் இந்த பணிகள் தொடங்கிய பிறகே ரெயில் சேவையில் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்கிற முழுமையான தகவல் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×