என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எடப்பாடி அருகே முன் விரோதத்தால் குழந்தையை கடத்தி காவிரி ஆற்றில் வீசியவர் கைது
- போலீசார் மற்றும் குழந்தையின் பெற்றோர் விடிய விடிய காவிரி ஆற்றங்கரையில் தேடினர்.
- குழந்தையை கடத்திச் சென்று காவிரி ஆற்றில் வீசிய லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கோனேரிப்பட்டி அருகே உள்ள வெள்ளாளபாளையம் கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி லோகநாதன் (வயது 28). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (43) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் லோகநாதனின் 4 வயது மகன் சிவகார்த்திக், நேற்று மாலை திடீரென காணாமல் போனார்.
வீட்டின் அருகே விளையாடிய கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதால் குழந்தையின் பெற்றோருக்கு, லட்சுமணன் மீது சந்தேகம் ஏற்பட்டு தேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து போலீசார் குழந்தையும், புகாருக்குள்ளான லட்சுமணனையும் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில், நள்ளிரவு நேரத்தில் லட்சுமணனை போலீசார் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், முன் விரோதத்தின் காரணமாக, லோகநாதனின் குழந்தையை கடத்திச் சென்று வெள்ளாளபாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றில் வீசியதாக லட்சுமணன் தெரிவித்தார். இதனை அடுத்து போலீசார் மற்றும் குழந்தையின் பெற்றோர் விடிய விடிய காவிரி ஆற்றங்கரையில் தேடினர்.
இந்நிலையில் இன்று காலை வெள்ளாளபாளையம் அருகே உள்ள காவிரி ஆற்றங்கரை பகுதயில் உள்ள ஒரு வாழை தோப்பு அருகே குழந்தை சிவக்கார்திக் மயங்கி கிடந்ததை கண்ட காவல்துறையினர், குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மேலும் குழந்தையை கடத்திச் சென்று காவிரி ஆற்றில் வீசிய லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்விரோதம் காரணமாக 4 வயது குழந்தையை கடத்தி சென்று காவிரி ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்படுத்தி உள்ளது.






