search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    துரோகிகளை தூள் தூளாக்குவோம்- ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி வீர சபதம்
    X

    'துரோகிகளை தூள் தூளாக்குவோம்'- ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி வீர சபதம்

    • எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
    • பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, போட்டோ ஷூட் ஆட்சியை நடத்தி வரும் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள்.

    அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு செல்லும் நுழைவு வாயில் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். உறுதிமொழியை அவர் வாசிக்க தொண்டர்கள் திருப்பி சொன்னார்கள்.

    ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி எடுத்துக் கொண்ட உறுதிமொழி வருமாறு:-

    மக்களாட்சியின் மகத்துவத்தையும், மாண்பையும் எடுத்துரைத்த, இதய தெய்வம் அம்மா வழியில், தொடர்ந்து பயணிப்போம். தடம் மாறாது, தடுமாறாது, நாம் கொண்ட கொள்கையில் லட்சியத்தோடு, வீறு நடை போடுவோம். எதிரிகளை விரட்டியடிப்போம். துரோகிகளை தூள் தூளாக்குவோம் என்று, வீர சபதம் ஏற்கிறோம்.

    குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி, மக்கள் ஆட்சியை மலரச் செய்திட, தமிழ் நாடு, தலைசிறந்த மாநிலமாய்த் திகழ்ந்திட, பார் போற்ற, தமிழகம் சிறந்து விளங்கிட, அயராது உழைப்போம்.

    பொய்யான வாக்குறுதிகளைத் தந்து, மக்களை ஏமாற்றி, போட்டோ ஷூட் ஆட்சியை நடத்தி வரும் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம், ஆட்சிக்கு வந்தவுடன், நீட் தேர்வு ரத்தென்றார். ஆட்சிக்கு வந்தவுடன், கல்விக் கடன் ரத்தென்றார். ஆட்சிக்கு வந்தவுடன், விலைவாசி குறையுமென்றார். ஆட்சிக்கு வந்தவுடன், குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்றார். செய்தாரா?

    கழக ஆட்சியிலும், மழை வந்தது; புயல் வந்தது. அப்போதெல்லாம் மக்களுக்கு, பல்வேறு வகைகளில், துணை நின்றோம்.

    தற்போதைய ஆட்சியிலே, பத்து நாள் மழைக்கே, தலைநகர் சென்னை, பரிதவித்தது.

    மக்கள் நலத்திட்டங்களை, நிறுத்தாதே, நிறுத்தாதே. பொய் வழக்குகளைப் போட்டு, கழகத்தை, முடக்கி விட முடியுமா? அழித்துவிட முடியுமா? எதிரிகள் ஒரு பக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதிவலைகளை அறுத்தெறிவோம். பொய் வழக்குகளை முறித்தெறிவோம்.

    பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. இத்தேர்தலில், வெற்றிக் கூட்டணி, மெகா கூட்டணி அமைத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட, சூளுரைப்போம்! நாற்பதும் நமதே, நாளையும் நமதே என்று, வீர சபத மேற்கிறோம்!

    தமிழ்நாடு தழைக்க, தமிழ் நாடு தழைக்க, உழைத்திடுவோம்! புரட்சித் தலைவரின் பெரும் புகழையும், புரட்சித் தலைவியின் பெரும் புகழையும், எந்நாளும் போற்றிடுவோம்.

    இவ்வாறு உறுதிமொழி ஏற்றினர்.

    Next Story
    ×