என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சேலத்தில் கவர்னரை கண்டித்து தி.மு.க. பரபரப்பு போஸ்டர்
- நீட் விலக்கு மசோதாவை 2-வது முறையாக நிறைவேற்றி தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக ஜனாதிபதிக்கு கவர்னர் ரவி அனுப்பி வைத்தார்.
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேலம்:
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. முதலில் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காத்திருப்பில் வைத்ததில் தொடங்கிய பிரச்சனை தற்போது வரை தொடர்ந்து கொண்டே உள்ளது.
நீட் விலக்கு மசோதாவை 2-வது முறையாக நிறைவேற்றி தமிழக அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக ஜனாதிபதிக்கு கவர்னர் ரவி அனுப்பி வைத்தார். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து ஏராளமானோர் தொடர்ந்து தற்கொலை செய்தி கொண்டிருந்த நிலையில், இதற்காக ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இதற்கும் கவர்னர் ரவி ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். அந்த மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதனையடுத்து மீண்டும் தமிழக அரசு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. பின்னர் இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி தொடர்பான விவகாரத்திலும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் சேலத்தில் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. அதில், கிண்டியாரே தயாரா? மத்திய பா.ஜ.க. அரசில் 44 சதவீதம் மந்திரிகள் குற்ற வழக்குகளை சந்தித்து வருகிறார்கள்.
இவர்களை பதவியில் இருந்து விலக சொல்லி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவாரா கவர்னர்? என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டல் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






