search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிரிக்கெட் பேட், பந்து வடிவிலான பட்டாசு ரகங்களை வாங்க இளைஞர்கள் அதிக ஆர்வம்

    • ஹனி பீஸ் என்ற பட்டாசு கொளுத்தியவுடன், பச்சை, சிவப்பு நிறங்களில் ஒளிர்ந்து, தேனீக்கள் பறந்து மேலே செல்வது போல் தெரியும்.
    • டிவின் லைட்டிங் பால் என்ற பட்டாசை திரியில் பற்ற வைத்தவுடன் நீர்வீழ்ச்சியை போல ஒளி மிளிர்ந்து பிளாஸ்டிக் கலர்களில் சிறு பந்துகள் வெளிவரும்.

    சிவகாசி:

    "குட்டி ஜப்பான்" என்று அழைக்கப்படும் சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு கம்பி மத்தாப்பு துவங்கி வானில் வெடித்து சிதறி கண்களுக்கு விருந்தளித்து வர்ண ஜாலங்களை நிகழ்த்தும் பேன்சி ரகம் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் புதிய யுக்தியை கையாண்டு வாடிக்கையாளர்களையும், அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமிகளையும், இளைஞர்களையும் கவரும் விதத்தில் புதுப்புது பட்டாசு வகைகளை வித்தியாசமான முறைகளில் தயாரித்து அறிமுகப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

    அதேபோன்று இந்த வருடமும் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பல்வேறு தொழில்நுட்பங்களில், உற்பத்தியான புதிய ரக பட்டாசுகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் பரவசப்படுத்தும் விதமாக வந்துள்ளது. தீபாவளி பண்டிகை விற்பனைக்காக பட்டாசு கடைகளில் குவிந்து, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வரிசையாக அணிவகுத்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கிரிக்கெட் கோப்பை கிரிக்கெட் போட்டியை பெருமைப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேட்-பால் என்ற பட்டாசு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    திரியில் தீயை பற்ற வைத்தவுடன், கிரிக்கெட் மட்டையிலிருந்து கம்பி மத்தாப்பு போல எரிந்து, பந்திலிருந்து வண்ண நிறங்களில் புகை வெளிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதே போல் இளைஞர்களையும், இளம்பெண்களை கவரும் வகையில் காதலை வெளிப்படுத்தும் ஆர்டின் வடிவ கம்பி மத்தாப்பு, மல்லிகை பூ போல் வெடித்து சிதறும் மதுரை மல்லி புஸ்வானம் பட்டாசுகள் இந்த ஆண்டு புதிய வரவாக அமைந்துள்ளது.

    கிக்கபிள்ஸ் என்ற பட்டாசு மேல் கவர் சாக்லேட் கவர் போலிருந்து, அதன் திரியில் தீயை பற்ற வைத்தவுடன் சக்கரம் சுழல்வது போல சுழன்று, அதிலிருந்து 2 பம்பரங்கள் தனியாக வெளியேறி கலர் வெளிச்சத்துடன் சுழல்கிறது. சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ள கிண்டர்ஜாய் சாக்லேட் வடிவ பட்டாசில் தீயை பற்ற வைத்தவுடன் சக்கரம் போல சுற்றி, அதிலிருந்து 2 வண்ணத்து பூச்சிகள் பிரிந்து மேலே எழும்பி சென்று சடசடவென வெடித்து சிதறும்.

    ஹனி பீஸ் என்ற பட்டாசு கொளுத்தியவுடன், பச்சை, சிவப்பு நிறங்களில் ஒளிர்ந்து, தேனீக்கள் பறந்து மேலே செல்வது போல் தெரியும். பைவ்ஜி பட்டாசை பற்ற வைத்தவுடன், 5 வண்ண கலர்களில் பைப்பிலிருந்து ஒளிர்ந்து வெளிவரும். டிவின் லைட்டிங் பால் என்ற பட்டாசை திரியில் பற்ற வைத்தவுடன் நீர்வீழ்ச்சியை போல ஒளி மிளிர்ந்து பிளாஸ்டிக் கலர்களில் சிறு பந்துகள் வெளிவரும்.

    பாம்பு சக்கரம் என்ற பட்டாசை பற்ற வைத்தவுடன் சக்கரங்கள் சுழன்று, அதிலிருந்து கரும் நிறத்தில் பாம்புகள் படையெடுத்து வெளிவரும். அதேபோன்று மீன், முதலை, துப்பாக்கி போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பட்டாசுகளில் தீயை பற்ற வைத்த உடனே தீப்பிழம்பு சீறிப்பாய்ந்து முடிவில் வண்ண வண்ண நிறத்தில் புகை அதிலிருந்து வெளிவரும்.

    இதுபோன்ற 15-க்கும் மேற்பட்ட பார்பி பொம்மை வடிவ பட்டாசு, ஹேப்பிஜி ராபி, மீமோ, கடல்குதிரை, மோட்டுபட்லு, ஹார்க், கிட்ஸ்ஜோன், கோல்டன் லைன், ட்ரோன், ஸ்கை கிங் படாபீகாக், பப்ஜி உள்ளிட்ட சிறுவர்களுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் கார்ட்டூன்களில் வடிமைத்த பட்டாசுகள் அனைத்து தரப்பினர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    தீபாவளிக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில், இப்பொழுதே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசு ரகங்களை சிறுவர், சிறுமிகள் ஆராய தொடங்கி, புதிய வகை பட்டாசுகளை வாங்கி சந்தோஷத்துடன் வெடித்து மகிழ தீபாவளி கொண்டாட்டத்திற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

    ஆண்டுதோறும் புது வகையான பட்டாசுகளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதால் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை அமோகமாக இருக்கும் எனவும், குழந்தைகளையும், இளைஞர்களையும் குறி வைத்தே ஒவ்வொரு வருடமும் புது பட்டாசுகள் உற்பத்தியாகி விற்பனைக்கு வருவதால், தீபாவளி பட்டாசு விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சரவெடிகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படாததால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் குறைவு தான். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இச்சமயத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக பட்டாசு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×