search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீமதி மரணம் விவகாரம்: நீதி கேட்டு டிஜிபி அலுவலகம் முன்பு முற்றுகை- 100 பேர் கைது
    X

    ஸ்ரீமதி மரணம் விவகாரம்: நீதி கேட்டு டிஜிபி அலுவலகம் முன்பு முற்றுகை- 100 பேர் கைது

    • போலீசாரின் தடுப்பை மீறி உள்ளே செல்ல முயன்ற மாதர் சங்கத்தை சேர்ந்த 24 பேர் கைது.
    • சாலைமறியலில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் டி.ஜி.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து அந்த சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் வாசுகி தலைமையில் மாதர் சங்கத்தை சேர்ந்தவர்கள் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் கல்யாணி மருத்துவமனை அருகே திரண்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்ய முயற்சித்தனர். இதனால் போலீசாருக்கும், மாதர் சங்கத்தினருக்கும் இடையே லேசான மோதல்- தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த மறியல் காரணமாக ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த போராட்டம் காரணமாக டி.ஜி.பி. அலுவலகம் அருகில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட வாசுகி கூறும்போது, போராட்டத்துக்கு வந்த நிர்வாகிகளை வழியிலேயே போலீசார் மடக்கி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார்.

    மாணவி ஸ்ரீமதி வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும், போக்சோ சட்டப்பிரிவை வழக்கில் சேர்க்க வேண்டும், குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும், ஸ்ரீமதியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்குவதுடன் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    Next Story
    ×