search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீடுகளில் 1 யூனிட் மின்சாரத்துக்கு 11 காசுகள் அதிகரிக்க முடிவு- தமிழக மின்வாரிய அதிகாரிகள் தகவல்
    X

    வீடுகளில் 1 யூனிட் மின்சாரத்துக்கு 11 காசுகள் அதிகரிக்க முடிவு- தமிழக மின்வாரிய அதிகாரிகள் தகவல்

    • தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன.
    • மின் வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் சுமார் 3 கோடி அளவுக்கு மின் இணைப்புகள் உள்ளன.

    இதில் வீட்டு மின் இணைப்புகள் 2 கோடியே 30 லட்சம் ஆகும். இது தவிர 10 லட்சம் குடிசை மின் இணைப்புகள், 23 லட்சம் விவசாய மின் இணைப்புகள், 1 லட்சத்து 60 ஆயிரம் விசைத்தறி மின் இணைப்புகள் உள்ளன.

    இந்த 4 வகையான மின் இணைப்புகளில் வீட்டு உபயோக மின் இணைப்புக்கும், விசைத்தறி மின் இணைப்புக்கும் 100 யூனிட் மின்சாரம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்துக்காக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடியை செலவு செய்கிறது. இதில் வீடுகளின் பங்கு மட்டும் ரூ.5,284 கோடி ஆகும்.

    மின் கட்டண சலுகையை பல பேர் தவறாக பயன் படுத்துவதை கண்டறிய வீட்டுக்கு வீடு ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மின் வாரியம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அனைவரும் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

    இப்போது யார்-யார் எத்தனை வீடுகளுக்கு மானியம் பெறுகிறார்கள் என்ற விவரம் அரசின் கைவசம் உள்ளது. இதனால் எவ்வளவு பணம் வீணாகி வருகிறது என்ற விவரமும் மின் வாரியத்திடம் இருக்கிறது.

    தற்போது தமிழக மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதை சமாளிக்க அரசிடம் இருந்து மின் வாரியம் கடன் வாங்கி வருகிறது. அந்த வகையில் மின் வாரியத்துக்கு ரூ.1.59 லட்சம் கோடி கடன் உள்ளது.

    ஆனாலும் நிலக்கரி கொள்முதல், மின் வினியோக வழித்தடம் பராமரித்தல், துணைமின் நிலையங்கள் அமைத்தல், உபகரணங்கள் வாங்குதல், ஊழியர்களின் சம்பளம் போன்றவைகளுக்கு அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது.

    மின்வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மின் கட்டணத்தை உயர்த்த கோரி கடந்த ஆண்டு ஜூலை 18-ந்தேதி மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்த போது கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

    அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 10-ந்தேதி மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்தது. அதன்படி வீடுகளுக்கு 100 யூனிட்டுக்கு மேல் ரூ.2.25 வசூலிக்கப்படுகிறது. 400 யூனிட் வரை 1 யூனிட்டுக்கு ரூ.4.60 வீதம் கணக்கிட்டு வாங்குகிறார்கள்.

    401-500 யூனிட் வரை ரூ.6-ம், 501-600 யூனிட் வரை ரூ.8-ம், 601-800 யூனிட் வரை ரூ.9-ம், 801-1000 யூனிட் வரை ரூ.10-ம் 1001 யூனிட் மேல் 1 யூனிட் ரூ.11 என்றும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    தொழிற்சாலைகளுக்கான கட்டணம் 1 யூனிட் ரூ.6.35-ல் இருந்து ரூ.6.75 ஆக உயர்ந்தது.

    இந்த கட்டணம் உயர்த்தப்பட்ட போது மின்சார ஒழுங்கு முறை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் இனி மேல் ஆண்டு தோறும் ஜூலை 1-ந்தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டது.

    2023 ஏப்ரல் மாத நிலவரப்படி உள்ள பணவீக்க விகித அளவு அல்லது 6 சதவீதம் இதில் எது குறைவாக உள்ளதோ, அந்த அளவு கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    இதன்படி கடந்த ஏப்ரல் மாதம் பண வீக்கம் 4.70 சதவீதம் இருந்தது. இதன் அடிப்படையில் 4.70 சத வீதம் வரை உயர்த்த வேண்டும்.

    அடுக்குமாடி குடியிருப்புகளை பொறுத்தவரை வீடுகளுக்கு உரிய கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் குடிநீர் மோட்டார், காம்புண்டு விளக்கு போன்ற பொது பயன்பாட்டில் உள்ளவைகளுக்கு வணிக கட்டணமாக யூனிட்டுக்கு 8 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

    அடுத்த மாதம் மின் கட்டணம் அதிகரிக்கும் போது இது மேலும் 4.7 சதவீதம் அதிகமாகும்.

    அதன்படி பார்த்தால் வீட்டு பயன்பாட்டுக்கு உரிய மின் கட்டணம் யூனிட்டுக்கு 11 பைசா உயரும் என்றும் கடைகளுக்கு யூனிட் 30 பைசா உயரும் என்றும் தெரிகிறது.

    இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகாரி கூறியதாவது:-

    மின் கட்டணத்தை ஆண்டு தோறும் உயர்த்த வேண்டும் என்று மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில் ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

    அதன்படி பார்த்தால் வீடுகளுக்கு யூனிட்டுக்கு 11 பைசா அதிகரிக்கும். கடைகளுக்கு 30 பைசா யூனிட்டுக்கு அதிகரிக்கும்.

    ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டால்தான் மக்களுக்கு சுமை தெரியாது. இல்லையென்றால் ஒவ்வொரு ஆண்டுக்குரிய கட்டண உயர்வையும் சேர்த்துதான் வசூலிக்க வேண்டியது வரும். அப்போது பெரிய சுமையாக தெரியும்.

    எனவே இப்போது 4.70 சதவீத உயர்வு என்பது சிறிய தொகைதான். இதில் பொதுமக்களின் விமர்சனம் என்னவென்றால் 9 மாதங்களுக்கு முன்பு தானே மின் கட்டணத்தை உயர்த்தினீர்கள். அதற்குள் மறுபடியும் உயர்த்துவதா? என்று கேள்வி கேட்பார்கள் அதுதான் பிரசினை.

    எனவே ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும் அதை அப்படியே செயல்படுத்த வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. 2 ஆண்டுக்கு ஒருமுறை கூட உயர்த்திக் கொள்ளலாம். அது அரசின் கொள்கை முடிவை பொறுத்து அமையும். எனவே அரசு சார்பில் விரைவில் இதற்கு தெளிவான பதில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×