search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீலகிரியில் தொடரும் மழை: 3 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு
    X

    நீலகிரியில் தொடரும் மழை: 3 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

    • சூறாவளி காற்றுக்கு கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் இரும்பு குழாய்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்த 2 சிக்னல் கம்பங்கள் சரிந்து விழுந்தன.
    • குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது

    நேற்று முன்னதினம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. மழையுடன் பலத்த சூறாவளி காற்றும் வீசியது.

    சூறாவளி காற்றுக்கு கோத்தகிரி பஸ் நிலையம் பகுதியில் இரும்பு குழாய்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்த 2 சிக்னல் கம்பங்கள் சரிந்து விழுந்தன.

    இதில் ஒரு கம்பம் சாலையின் குறுக்கிலும், மற்றொன்று ஆட்டோ ஸ்டேண்ட் பகுதியிலும் விழுந்தது. இரவு நேரத்தில் விழுந்ததால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

    இதே போல கோத்தகிரியிலிருந்து கொடநாடு செல்லும் சாலையில் ஈளாடா பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய மருந்து குடோனின் மேற்கூரை பறந்து சென்று கீழே விழுந்தது.

    மேலும் கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் அருகே ஷீலா என்பவரது வீட்டின் மேற்கூரை மற்றும் கொணவக்கரை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரைகள் பலத்த காற்றின் காரணமாக பறந்து சென்றது. இதனால் வீடுகள் சேதமடைந்தன.

    மழைக்கு ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் எல்லிநள்ளி என்ற இடத்திலும், கேத்தி போலீஸ் நிலையம் செல்லும் சாலையில் 2 இடங்களிலும் ரோட்டின் குறுக்கே மரம் விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றி அப்புறப்படுத்தினர்.

    குயின்சோலை குடியிருப்புப் பகுதியில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மரங்கள் வீடுகளின் மேல் சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பு மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நேற்றும் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அவ்வப்போது மழையும், சிறிது நேரம் வெயிலுடன் கூடிய சீதோஷ்ண நிலையும் காணப்பட்டது.

    ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் நேற்று சற்று மழை குறைந்து வெயில் காணப்பட்டது. மழை குறைந்த போதிலும் கடுமையான குளிர் நிலவி வருகிறது.

    அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். குளிரில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள்.

    Next Story
    ×