search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யும்- கோவை வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு
    X

    வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யும்- கோவை வேளாண் பல்கலைக்கழகம் கணிப்பு

    • பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
    • பண்ணை குட்டைகளில் மழைநீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம்.

    கோவை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகியவை மூலம் மாநிலஅளவில் நீர்நிலைகள் பெருகி விவசாயம் செழித்து வருகிறது.

    இதன் ஒருபகுதியாக கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் இது எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. எனவே 2 மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

    இந்த நிலையில் கோவை, நீலகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவை, நீலகிரியில் ஏற்கெனவே தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறித்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

    அதன்படி தமிழகத்தில் அரியலூர், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், சேலம், தஞ்சை, நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாக்குமரி, காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்குபருவமழை இயல்பானஅளவில் பெய்யும்.

    சென்னை, செங்கல்பட்டு, கடலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட குறைவான அளவில் மழை பெய்யும்.

    எனவே அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் வடகிழக்கு பருவமழை காலத்துக்கான குறுகிய-மத்திய கால பயிர் ரகங்களை தேர்வுசெய்து பயிரிட வேண்டும், பாசனவசதியுள்ள பகுதிகளில் மட்டும் நீண்டகால பயிர் ரகங்களை தேர்வு செய்யலாம்.

    மேலும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் மழைநீரை சேமிக்கும் வகையில் குறுக்கும் நெடுக்குமாக 20 அடி இடைவெளியில் சிறுவரப்புகளை அமைக்கலாம்.

    பண்ணை குட்டைகளில் மழைநீரை தேக்கி விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். மானாவாரி சாகுபடியில் விதைகளை கடினப்படுத்தி விதைப்பு செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட விதை நேர்த்தி முறைகளை பின்பற்றினால் வடகிழக்கு பருவமழை மூலம் விவசாயத்தை சிறப்பாக செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×