search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முன்பதிவு பெட்டிகளில் தொல்லை தரும் பயணிகள்- சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு வழியில் படுப்பதால் அவதி
    X

    முன்பதிவு பெட்டிகளில் தொல்லை தரும் பயணிகள்- சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு வழியில் படுப்பதால் அவதி

    • ரெயில்களில் பயணிப்பதற்காக கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்ட பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வருகின்றனர்.
    • ரெயில் பிளாட்பாரத்திற்கு வந்ததும் போட்டி போட்டு கொண்டு இருக்கையை பிடித்து அமருகிறார்கள்.

    கோவை:

    கோவை ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, நெல்லை, மதுரை, நாகர்கோவில், சேலம், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயில்களில் பயணிப்பதற்காக கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்ட பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வருகின்றனர். ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் ரெயில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

    இதனால் ரெயில் நிலையம் எப்போது பார்த்தாலும் மிகவும் பரபரப்பாகவே காணப்படும்.

    இங்கிருந்து தினமும் பயணிகள் ரெயில் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் குடும்பத்துடன் செல்பவர்கள் ரெயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கவே ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் எந்த ஒரு பண்டிைக அல்லது பண்டிகை அல்லாத நாட்களில் கூட முன்பதிவுகள் அதிகமாக நடக்கிறது.

    பெரும்பாலும் ஆன்லைனிலேயே முன்பதிவானது செய்யப்படுகிறது. ஒருசிலரே ரெயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள்.

    பெரும்பாலோனார் முன்பதிவு இல்லாத பெட்டிகளிலும் பயணிக்கின்றனர்.

    முன்பதிவு செய்யும் பயணிகள் ரெயில் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக வந்து தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொள்கிறார்கள்.

    முன்பதிவு செய்யாத பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய ரெயிலில் இடத்தை பிடிப்பதற்காக பல மணி நேரத்திற்கு முன்பாகவே வந்து விடுகிறார்கள்.

    ரெயில் பிளாட்பாரத்திற்கு வந்ததும் போட்டி போட்டு கொண்டு இருக்கையை பிடித்து அமருகிறார்கள்.

    இன்னும் சிலருக்கு, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி எது, முன்பதிவு செய்யப்படாத பெட்டி எது என்பது கூட தெரியாமல் காலியாக உள்ள ரெயில் பெட்டிகளில் ஏறி அமர்ந்து கொள்கின்றனர். அவ்வாறு ஏறும் சில பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் அமர்ந்து கொள்கின்றனர்.

    அப்போது அங்கு வரும் முன்பதிவு செய்த பயணிகள் அவர்களிடம் விளக்கி கூறி அமர வேண்டி உள்ளது. சில நேரங்களில் அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர். சிலர் ரெயில் கிளம்பியதும், ஊருக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் கிடைத்த பெட்டியில் ஏறி விடுவோம் என ஏறி விடுகின்றனர். அது முன்பதிவு பெட்டியோ, முன்பதிவு இல்லாத பெட்டியோ என்பதை எல்லாம் பார்ப்பதில்லை. இடம் கிடைத்தால் போதும் என ஏறி விடுகிறார்கள். அப்படி ஏறுபவர்கள், இருக்கை இல்லாத போது தரையிலேயே அமர்ந்து கொள்கிறார்கள்.அங்கு அமர்ந்து கொள்வதுடன் படுத்தும் தூங்கி விடுகிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தவர்கள் அதிகமானோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். முன்பதிவு பெட்டிகளில் ஏறி நடந்து செல்லும் வழியில் அமருவதும், படுத்து தூங்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை டிக்கெட் பரிசோதகர்கள் கண்டு கொள்வதில்லை. இதனால் முன்பதிவு செய்து வரும் பயணிகள் எழுந்து செல்வதற்கு கூட சிரமப்படுகிறார்கள்.

    இதுகுறித்து கோவை ரெயில் பயணிகள் கூறியதாவது:-

    ரெயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது சிரமம் இல்லாமல் செல்வதற்காக தான். சில நேரங்களில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், தட்கலில் கூடுதல் பணம் செலுத்தி டிக்கெட்டை வாங்குகிறோம்.

    அவ்வாறு வாங்கி பயணம் மேற்கொள்ள சென்றால் முன்பதிவு செய்த இருக்கையில் மற்றவர்கள் அமர்ந்து இருகிறார்கள்.

    அவர்களிடம் இது நாங்கள் முன்பதிவு செய்த இருக்கை என்றால் சிலர் புரிந்து கொண்டு எழுந்து சென்று விடுகிறார்கள், சிலர் முன்பதிவு எல்லாம் கிடையாது. நானும் காசு கொடுத்து தான் வருகிறேன். நீயும் காசு கொடுத்து வருகிறாய் என எதிர்கேள்வி கேட்டு தகராறு செய்கிறார்கள்.

    அவர்களிடம் எவ்வளவோ எடுத்து சொன்னாலும் கூட அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. அவர்கள் கூறியது தான் சரி என்ற நிலைப்பாடுடன் இருக்கின்றனர்.அவர்கள் எழுந்து செல்லும் வரை நாங்கள் பெட்டி படுக்கையுடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    சில நேரங்களில் பெரிய தகராறாக மாறி விடுகிறது. அந்த சமயத்தில் டிக்கெட் பரிசோதகரும் கண்ணில் படுவதே கிடையாது.

    பெரும் போராட்டத்திற்கு பிறகே இருக்கையில் அமர முடிகிறது. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்யும் போது முன்பதிவு செய்த இடத்திற்கு போட்டி போட தேவை இருப்பது இல்லை.

    ஆனால் ரெயில் பயணிக்கும் போது சிலர் வேகமாக வந்து முன்பதிவு பெட்டியில் ஏறி விடுகிறார்கள். அப்படி வருபவர்கள், இருக்கைக்கு கீழே அமர்ந்து, படுத்து தூங்குகிறார்கள்.

    வடமாநிலத்தவர்கள் தான் அதிகமாக இதுபோன்று செய்கிறார்கள். அதிலும் அவர்கள் குடும்பம், குடும்பமாக வந்து இருக்கையின் கீழே நடந்து செல்வதற்கு கூட இடம் இல்லாமல் அமர்ந்து கொள்கிறார்கள்.

    இதனால் படுக்கையில் இருந்து எழுந்து இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும் என்றால் பெரும் பாடாக உள்ளது. அதிலும் பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    எனவே இதுபோன்ற செயல்களை தடுக்க முன்பதிவு பெட்டிகளில், டிக்கெட் பரிசோதகர்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவர்களிடம் உரிய டிக்கெட் இருக்கிறதா? என்பதையும் சோதனை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இதனை தடுக்க முடியும். அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் யாருக்கும் எந்தவித தொந்தரவுகளும் இல்லாமல் பயணிப்பதே சிறந்ததாகும். இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×