search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாம்பு பிடி மன்னனை 2 முறை கடித்த பாம்பு- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    X

    பாம்பு பிடி மன்னனை 2 முறை கடித்த பாம்பு- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

    • காஜா மைதீனை 2-வது முறையாக பாய்ந்து வந்து கடித்துவிட்டு அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்றது.
    • காஜாமை தீன் மிகுந்த வலியில் அலறியபடி மயங்கி விழுந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகில் உள்ள திம்மராயம்பாளையத்தை சேர்ந்தவர் காஜாமைதீன் (வயது 43). இவருக்கு மனைவி நெபீஷா, மகள் பாத்திமா ஆகியோர் உள்ளனர்.

    திம்மராயம்பாளையம் பள்ளிவாசலில் காஜா மைதீன் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் பாம்பு பிடிக்கும் தொழிலிலும் பகுதிநேரமாக ஈடுபட்டு வந்து உள்ளார்.

    இந்த வகையில் அவர் இதுவரை 100-க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளை பிடித்து பத்திரமாக காட்டுக்குள் விடுவித்து உள்ளார். எனவே காஜா மைதீனை அங்கு உள்ள பொதுமக்கள், பாம்புபிடி மன்னன் என்று மரியாதையுடன் அழைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சிறுமுகை-அன்னூர் சாலையில் தியேட்டர் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள ஒரு மினி லாரியில் நாகப்பாம்பு புகுந்து உள்ளதாக தீயணைப்பு துறைக்கு தகவல் வந்தது.

    தொடர்ந்து அவர்கள் இதுகுறித்து காஜா மைதீனுக்கு தகவல் தெரிவித்து, மினி லாரிக்குள் புகுந்திருக்கும் நாகப்பாம்பை பத்திரமாக பிடித்து ஒப்படைக்கும்படி அறிவுறுத்தினர்.

    எனவே காஜாமைதீன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அங்கு மினி லாரிக்குள் புகுந்து இருந்த நாகப்பாம்மை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அந்த பாம்பு எதிர்பாராதவிதமாக பாய்ந்து வந்து கொத்தியது. இருந்தபோதிலும் காஜாமைதீன் நாகப்பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டார்.

    தொடர்ந்து அவர் வனத்துறையினருடன் சிறுமுகை காட்டுக்குள் சென்றார். அங்கு நாகப்பாம்பு பத்திரமாக விடுவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பாம்பு மீண்டும் காஜா மைதீனை 2-வது முறையாக பாய்ந்து வந்து கடித்துவிட்டு அடர்ந்த காட்டுக்குள் தப்பி சென்றது.

    நாகப்பாம்பு 2 முறை கொத்தியதால் காஜாமை தீன் மிகுந்த வலியில் அலறியபடி மயங்கி விழுந்தார். தொடர்ந்து அவரை வனத்துறையினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்கை அளிக்கப்பட்டது. பின்னர் காஜாமை தீன் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே நாகப்பாம்பு கொத்தியதில் படுகாயம் அடைந்த காஜாமை தீன் குடும்பத்துக்கு தனியார் ஆஸ்பத்திரியில் உயர்தர சிகிச்சைகள் அளிக்க வேண்டும், மேலும் அவருக்கு தமிழக அரசு சார்பில் உரிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×