search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை கார் வெடிப்பு சம்பவம்: சென்னை- திருச்சியில் 6 இடங்களில் சோதனை
    X

    சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் சோதனை நடந்த வீடு

    கோவை கார் வெடிப்பு சம்பவம்: சென்னை- திருச்சியில் 6 இடங்களில் சோதனை

    • சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.
    • வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

    சென்னை:

    கோவையில் கடந்த மாதம் 23-ந்தேதி கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் வாலிபர் முபின் உயிர் இழந்தார்.

    காரில் சிலிண்டர்கள் மற்றும் வெடி பொருட்களை எடுத்துச் சென்று மிகப்பெரிய தற்கொலை படை தாக்குதலுக்கு முபின் திட்டமிட்டது என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்தது.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் குண்டு வெடிப்பு சம்பவம் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர்.

    கார் வெடிப்பு சம்பவத்தின் முழு பின்னணி தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழகம் முழுவதும் தொடர் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னையிலும் மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 15-ந்தேதி 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாட்டு பணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதனை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் 4 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். வேப்பேரி ரித்தர்டன் சாலையில் புகாரி என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தலைமை செயலக காலனி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பி.பிளாக்கில் உள்ள சாகுல் அமீது வீடு, முத்தியால் பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமர் பாரூக் வீடு மற்றும் ஏழு கிணறு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு இடம் ஆகியவற்றிலும் சோதனை நடத்தப்பட்டது.

    ஓட்டேரியில் அயனாவரம் உதவி கமிஷனர் ஜவகர் தலைமையிலும், முத்தியால்பேட்டை பகுதியில் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையிலும், சோதனை நடத்தினர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனை, விசாரணை ஆகியவற்றில் கிடைத்த தகவலின் பேரிலேயே சென்னையில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலேயே கடந்த 15-ந் தேதி சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து 4 நாட்களில் இன்று மீண்டும் சோதனை நடைபெற்று உள்ளது.

    திருச்சி அருகே உள்ள இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் சாகுல் அமீது, சர்புதீன். இவர்கள் இருவருக்கும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்பு முகமை அறிவுறுத்தலின் பேரில் இன்று அவர்களின் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.

    துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிதாசன் தலைமையில் ராம்ஜிநகர் போலீசார் 50 பேர் இன்று காலை அவர்களின் வீடுகளில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் சாகுல் அமீதுவை ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை அழைத்து சென்று விசாரணை நடத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சோதனையில் சம்பந்தப்பட்ட இருவரின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளனர். மேலும் அவர்களின் வீடுகளில் ஒருசில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களின் பின்னணி மற்றும் சர்வதேச தொடர்புகளை கண்டறிவதற்காகவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அளிக்கும் தகவலின் பேரில் தொடர் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×