என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜேடர்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூடல்
- ஜேடர்பாளையத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- ஜேடர்பாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் வெல்லம் தயாரிக்கும் ஆலை உள்ளது. இங்கு வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள், அங்கேயே தங்கி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு, இவர்கள் தங்கி இருந்த அறைக்குள் புகுந்த மர்ம நபர்கள், தூங்கி கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். இந்த சம்பவம் ஜேடர்பாளையம் பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதைதொடர்ந்து, ஜேடர்பாளையத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளுக்கு தொடர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தெரிவிக்கையில், போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன் பேரில், கடந்த 14-ந் தேதி முதல் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. ஜேடர்பாளையத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது என தெரிவித்தனர்.






