என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே கோவில் திருவிழா தொடர்பாக மோதல்- பொதுமக்கள் சாலை மறியல்
- வருகிற 26-ந் தேதி திருவிழாவிற்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே நேற்று பிரச்சினை ஏற்பட்டு மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் காந்திநகர் காலனியில் அண்ணமார் கருப்புசாமி கோயில் திருவிழா நடத்துவது சொந்தமாக கடந்த 2017-ம் ஆண்டு இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு ஆர்.டி.ஓ .முன்னிலையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது.
அதையொட்டி திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு தரப்பினர் மட்டுமே வேறு இடத்தில் அப்போது திருவிழாவை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி திருவிழாவிற்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் இருதரப்பினருக்கும் இடையே நேற்று பிரச்சினை ஏற்பட்டு மாறி மாறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் காந்திநகர் காலனி ஊர் பொதுமக்கள் சார்பில் பிரச்சனைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனக் கூறி நேற்று இரவு திடீரென கோபிசெட்டிபாளையம்-சத்திரோடு நல்லகவுண்டன் பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றி தெரிய வந்ததும் கோபிசெட்டிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.






