என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சின்னவன் என்று என்னை அழையுங்கள்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    X

    சின்னவன் என்று என்னை அழையுங்கள்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    • நமது முதல்- அமைச்சரின் உடல் நலன் குறித்து என்னிடம் கேட்டறிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
    • நீங்கள் அனைவரும் எனக்கு பெரியார், அண்ணா, கலைஞரின் மறு உருவமாக தான் பார்க்கிறேன்.

    காஞ்சிபுரம்:

    உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'கலைஞரின் 99' என்ற தலைப்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.

    காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல்மாலிக் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பொற்கிழிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நமது முதல்- அமைச்சரின் உடல் நலன் குறித்து என்னிடம் கேட்டறிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தளபதியாருக்கு உங்கள் அன்பு உள்ளவரை எதுவும் ஆகாது. அவர் விரைவில் பூரண குணம் அடைந்து தமிழக மக்களுக்கு பணியாற்றுவார்.

    பல்வேறு இடங்களில் கழக ஆட்சியில் நல்லது நடக்கிறது என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் என்னிடம் பல்வேறு மனுக்கள் அளித்துள்ளனர். மனுக்களை முதல்-அமைச்சரிடம் நான் கொண்டு சேர்த்து அதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    நமது கட்சியில் இளைஞர் அணி, மாணவர் அணி மருத்துவர் என பல்வேறு அணிகள் தனித் தனியாக இயங்கினாலும் நாம் அனைவரும் ஒரே அணி. தந்தை பெரியார் அணி, பேரறிஞர் அண்ணா அணி, முத்தமிழறிஞர் கலைஞரின் அணி, நம்முடைய தலைவரின் அணி என அப்படித்தான் நமது பயணம் இருக்க வேண்டும்.

    ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நமது தலைவரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட செயலாளர்களிடம் நிதி உதவி கேட்டு பெற்று வருகிறோம். பெறப்படும் நிதிகள் அனைத்தும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    வரவு வைக்கப்பட்டுள்ள நிதிக்கு மாதம் வங்கி மூலம் வழங்கப்படும் வட்டியினை ஏழை மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவசரத் தேவைக்காக வழங்கப்பட உள்ளது.

    எனவே எந்த ஒரு உதவி தேவை என்றாலும் அதனை மனுவாக அளியுங்கள். அதனை பரிசீலனை செய்து அவர்களுக்கான உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நான் கலந்து கொள்ளும் விழாவில் அனைவரும் என்னை சின்னவர் சின்னவர் என்று அழைக்கிறார்கள். தயவு செய்து என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள்.

    ஏனென்றால் சின்னவர், என்று அழைப்பதால் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது. சின்னவன் என்று அழையுங்கள்' அது போதும்.

    நான் தந்தை பெரியாரையும் பேரறிஞர் அண்ணாவையும் நேரில் பார்த்ததில்லை, ஆனால் விழாவில் கலந்து கொண்ட மூத்த முன்னோடிகள் அனைவரும் பெரியார், அண்ணாவை பார்த்திருப்பீர்கள்.

    இதனால் நீங்கள் அனைவரும் எனக்கு பெரியார், அண்ணா, கலைஞரின் மறு உருவமாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் 2019 நாடாளுமன்ற தேர்தல் அதன்பின் சட்டமன்றத் தேர்தலில் அதன் பின் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியினை தமிழக மக்கள் நமது தலைவருக்கு வழங்கியுள்ளனர்.

    இனி அ.தி.மு.க.வினரை நாம் திட்டப்போவதில்லை. ஏனென்றால் அக்கட்சிக்குள்ளேயே அடித்து கொள்கின்றனர். மேலும் அந்த இயக்கத்திற்கு வரலாறு ஏதும் கிடையாது. ஆனால் நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு. எனவே தமிழக மக்கள் நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை".

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    முன்னதாக 2083 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியும் 422 ஏழை, எளிய பெண்களுக்கு தையல் எந்திரம், 10 மற்றும் 12-ம் வகுப்பில் அரசு பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 188 மாணவ-மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், பேரூராட்சி மன்றத் தலைவர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×