என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மழை வெள்ள பாதிப்பை வைத்து பா.ஜ.க.வினர் அரசியல் செய்கின்றனர்
    X

    மழை வெள்ள பாதிப்பை வைத்து பா.ஜ.க.வினர் அரசியல் செய்கின்றனர்

    • தமிழக மக்களுக்கு பா.ஜ.க. மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது.
    • மக்கள் பாதிப்பை வைத்து அரசியல் செய்யக் கூடாது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளில் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென் மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்த நேரத்தில் அரசியல் பார்க்காமல் மத்திய அரசு அதனை செய்திருக்க வேண்டும்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அடிப்படை கட்டமைப்பை சீர் செய்யவே பல்லாயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. மத்திய அரசு தற்போது வழங்கும் நிதியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்ற நோக்கில் தான் கூடுதல் நிதி மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வினர் அரசியல் பேசுகின்றனர்.

    மத்திய அரசு தற்போது ஒதுக்கிய நிதியை வைத்து மிச்சாங் சேதத்தை கூட சரி செய்ய முடியாது. மிச்சாங் புயல் சீரமைப்பு செய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.19 ஆயிரம் கோடி கேட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சேதத்தை கணக்கிட்டால் பல்லாயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்க தேவைப்படுகிறது. மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்காமல் இருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக அரசின் மீது கோபமடைந்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இதுபோன்று நினைக்கிறது.

    தமிழக மக்களுக்கு பா.ஜ.க. மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. தமிழக மக்கள் திராவிடத்தின் பின்னால் இருக்கின்றனர் என்ற எண்ணத்தை மனதில் வைத்து மத்திய பா.ஜ.க. அரசு இவ்வாறு செயல்படுவதாக தெரிகிறது.

    மக்கள் பாதிப்பை வைத்து அரசியல் செய்யக் கூடாது. அரசியல் ஒரு சாக்கடை என்பதை போல் பா.ஜ.க.வினர் செயல்படுகின்றனர். பா.ஜ.க.வினர் மழை வெள்ள பாதிப்பை வைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவர்களை விட்டு தள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×