search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கனவில் கூட இவ்வளவு பணத்தை நினைத்து பார்த்ததில்லை- ரூ.9 ஆயிரம் கோடியால் திகைத்து போன வாடகை கார் டிரைவர் ருசிகர பேட்டி
    X

    கனவில் கூட இவ்வளவு பணத்தை நினைத்து பார்த்ததில்லை- ரூ.9 ஆயிரம் கோடியால் திகைத்து போன வாடகை கார் டிரைவர் ருசிகர பேட்டி

    • ஒருவர் பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து பேசினார்.
    • மற்றொரு அதிகாரி போலீசில் புகார் அளித்து சிறையில் தள்ளுவோம் என்று மிரட்டினார்.

    சென்னை:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ் குமார் (வயது 28). வாடகை கார் டிரைவர். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி கார் ஓட்டி வருகிறார்.

    இவரது செல்போனுக்கு கடந்த 9-ந் தேதி குறுந்தகவல் வந்தது. அதில் அவரது வங்கிக் கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் இருந்து இந்த குறுந்தகவல் வந்தது. இதனால் அவருக்கு அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டது.

    பணம் வந்திருப்பது உண்மைதானா? என்று பரிசோதிக்க விரும்பிய அவர் ரூ.21 ஆயிரம் பணத்தை நண்பரின் வங்கி கணக்குக்கு செலுத்தி பார்த்தார். அந்த தொகை சென்றவுடன் மீதமுள்ள தொகை குறித்து ராஜ் குமாருக்கு மீண்டும் குறுந்தகவல் வந்தது. ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், மற்றொருபுறம் இந்த பணத்தால் பிரச்சினை ஏதும் வருமோ? என்ற எண்ணமும் ராஜ்குமாருக்கு இருந்தது. இந்த நிலையில் சுமார் 30 நிமிடங்களில் அந்த பணம் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் இருந்து திரும்ப பெறப்பட்டது.

    இதற்கிடையே ரூ.21 ஆயிரம் பணத்தை வேறு கணக்குக்கு அனுப்பி இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் ராஜ்குமாருக்கு போன் செய்து பணத்தை தவறு தலாக அனுப்பி விட்டதாக வும், ரூ.21 ஆயிரத்தை திருப்பி தராவிட்டால் போலீசில் புகார் செய்வோம் என்றும் கூறியதாக தெரிகிறது.

    இதை தொடர்ந்து ராஜ்குமார் வக்கீல் ஒருவருடன் தி. நகரில் உள்ள வங்கி கிளைக்கு சென்றார். அங்கு அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டது. ரூ.21 ஆயிரம் பணத்தை திருப்பி தர வேண்டாம், கார் வாங்க கடனுதவி அளிப்பதாகவும் ராஜ்குமாரிடம் வங்கி அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    தொழில் நுட்ப கோளாறு காரணமாக, தவறுதலாக ரூ.9 ஆயிரம் கோடி பணம் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இது குறித்து ராஜ்குமார் கூறியதாவது:-

    என் வங்கிக் கணக்குக்கு இவ்வளவு பணம் வந்ததை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இவ்வளவு பணத்தை நான் கனவில்கூட நினைத்து பார்த்ததில்லை.

    எனது வங்கி கணக்குக்கு ரூ.9 ஆயிரம் கோடி பணம் வந்ததை அறிந்ததும் திகைத்துப் போனேன். ஆனால் அரை மணி நேரத்தில் அந்த பணம் மீண்டும் வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.

    வங்கிக் கணக்கில் உண்மையிலேயே பணம் வந்துள்ளதா என்ற சந்தேகத்தின் பேரிலும், எனது நண்பர்களின் அறிவுரைப் படியும் தான் நண்பர் ஒருவருக்கு ரூ.21 ஆயிரத்தை அனுப்பி பார்த்தேன்.

    எனது வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டு திருப்பி எடுக்கப்பட்ட பிறகு அதில் ரூ.21 ஆயிரம் குறைந்திருந்ததால் வங்கியில் இருந்து அடுத்தடுத்து 2 அதிகாரிகள் போனில் என்னுடன் பேசினார்கள். ஒருவர் பணத்தை செலவு செய்ய வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து பேசினார். ஆனால் மற்றொரு அதிகாரி போலீசில் புகார் அளித்து சிறையில் தள்ளுவோம் என்று மிரட்டினார்.

    ஆனாலும் என் மீது தவறு இல்லாததால் நான் பயப்பட வில்லை. பிரச்சினை ஏதும் வரக் கூடாது என்பதற்காக தி.நகரில் உள்ள வங்கி கிளை அலுவலகத்துக்கு சென்று விளக்கம் அளித்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×