search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    32 கிலோ நகைகளையும் தங்க கட்டிகளாக மாற்றி விற்க திட்டம்- வங்கி கொள்ளையர்கள் பற்றி பரபரப்பு தகவல்கள்
    X

    நகைகளை உருக்குவதற்கு கொள்ளையர்கள் வாங்கிய மிஷினையும் அதற்கான கருவிகளையும் படத்தில் காணலாம்.

    32 கிலோ நகைகளையும் தங்க கட்டிகளாக மாற்றி விற்க திட்டம்- வங்கி கொள்ளையர்கள் பற்றி பரபரப்பு தகவல்கள்

    • இன்ஸ்பெக்டர் வீட்டில் கைப்பற்றப்பட்டதை போல மேலும் சில இடங்களில் இருந்தும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
    • நகைகளை வாங்கி வைத்திருந்த நபர்களும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கியில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    வங்கி கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முருகன், சூர்யா, சந்தோஷ், செந்தில்குமார், பாலாஜி ஆகிய 5 பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நிலையில் அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜூம் சிக்கியுள்ளார். இவர்கள் 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

    பெடரல் வங்கியில் கொள்ளையடித்த 32 கிலோ நகைகளையும் உடனடியாக உருக்கி விற்க கொள்ளையர்கள் திட்டம் போட்டுள்ளனர். இதற்காக கோவை நகைக்கடை அதிபர் ஸ்ரீவத்சவ் என்பவரிடம் முன்கூட்டியே பேசி இருக்கிறார்கள். இதன்படி கோவை சென்று ஸ்ரீவத்சவை சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

    அப்போது அவரிடம் ஒட்டுமொத்த நகைகளையும் மொத்தமாக உருக்குவதற்கு ஆலோசனை கேட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் நகைகளை உருக்கும் மிஷின் ஒன்றை வாங்கி அனைத்து நகைகளையும் உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி விட திட்டம் போட்டுள்ளனர்.

    இதற்காக குரோம்பேட்டை லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளனர். கோவை நகைக்கடை அதிபர் ஸ்ரீவத்சவ் மற்றும் அவரது உதவியாளரான ஸ்ரீராம் என்பவரும் இந்த லாட்ஜில் தங்கி நகைகளை உருக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்று 300 கிராம் நகைகளை கொள்ளையர்கள் உருக்கி இருக்கிறார்கள்.

    அப்போது புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன கொள்ளையர்களும், நகைக்கடை அதிபர் ஸ்ரீவத்சவ் மற்றும் உதவியாளர் ஸ்ரீராம் ஆகியோரும் இங்கு வைத்து நகைகளை உருக்கினால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணினர். இதையடுத்து நகைகளை உருக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.

    32 கிலோ நகைகளையும் சிறிய சிறிய கட்டிகளாக மாற்றி விட்டால் அதனை வெளியில் எடுத்துச் சென்று எளிதாக விற்பனை செய்து விடலாம் என்று கொள்ளை கும்பல் கணக்கு போட்டு உள்ளது. இதற்கு கோவை நகைக்கடை அதிபரான ஸ்ரீவத்சவ் முழு உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். இதற்காக வேலை முடிந்தவுடன் ஸ்ரீவத்சவுக்கு பெரிய தொகையை கைமாற்றி விடவும் கொள்ளையர்கள் முடிவு செய்திருந்தனர்.

    ஆனால் அதற்குள் போலீசார் விரைந்து செயல்பட்டு அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்ததுடன் கொள்ளை கும்பலையும் கூண்டோடு கைது செய்து விட்டனர்.

    திருட்டு நகைகளை உருக்குவதற்கு பெரிய அளவில் கொள்ளையர்களுக்கு உதவி செய்த கோவை நகைக்கடை அதிபர் ஸ்ரீவத்சவ் போலீஸ் பிடியில் இருந்து வந்தார். அவரை கைது செய்து சிறையில் அடைக்க உள்ளனர்.

    நகை கொள்ளை வழக்கில் ஸ்ரீவத்சவின் உதவியாளரான ஸ்ரீராம் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவரும் விரைவில் சிக்கி விடுவார் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வங்கி கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட அச்சரப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி இந்திரா மீது நடவடிக்கை பாயுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் பின்னரே இந்த விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இன்ஸ்பெக்டர் வீட்டில் கைப்பற்றப்பட்டதை போல மேலும் சில இடங்களில் இருந்தும் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த நகைகளை வாங்கி வைத்திருந்த நபர்களும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×