search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழனி முருகன் கோவிலில் அலகு குத்தி வந்த பக்தர்கள்- 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

    • ஆடி மாதம் வரும் கார்த்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • முருகனின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பழனி:

    ஆடி மாதம் வரும் கார்த்திகை நாள் ஆடிக்கிருத்திகை என அழைக்கப்படுகிறது. தட்சிணியான காலத்தில் முதல் மாதமான ஆடி மாதத்தில்தான் சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகள் கிளம்பி அதில் இருந்து ஆறுமுகம் தோன்றி அதனை கார்த்திகை பெண்கள் வளர்த்ததாக ஐதீகம் உள்ளது.

    அந்த 6 கார்த்திகை பெண்கள் வானில் நிரந்தர நட்சத்திரமாக மாறினர். இதனால் முருகனுக்கு கார்த்திகேயன் என்ற பெயரும் உண்டு. இந்த பண்டிகையை குறிக்கும் வகையில் ஆடி மாதம் வரும் கார்த்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    முருகனின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அலகு குத்தியும், மலர் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் முருகப் பெருமானை தரிசனம் செய்தனர்.

    கூட்டம் அதிகரிப்பின் காரணமாக சுமார் 2 மணி நேரம் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு காத்திருந்தனர். மலைக்கோவில், படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார் நிலையம், மின் இழுவை நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

    இதே போல் திண்டுக்கல் மேட்டுராஜக்காபட்டி பாலசுப்பிரமணியர் கோவிலில் முருகப்பெருமானுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள பாதாள செம்பு முருகன் கோவில், அபிராமிஅம்மன் கோவிலில் உள்ள பாலசுப்பிரமணியர் சன்னதி, ஆர்.வி.நகர் கந்தக்கோட்டம் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பால்குடம் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×