என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மரக்காணம் பகுதியில் 8 செ.மீ. கொட்டி தீர்த்த மழை: கடல் சீற்றம்- வீட்டில் முடங்கிய மீனவர்கள்
- மீனவர்கள் கடற்கரை ஓரமிருந்த தங்களது விசைப்படகுகளை மேடான பகுதிக்கு எடுத்துச் செல்கின்றனர்.
- ஏரி, குளம், குட்டையில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய மணல் மூட்டை தயார் நிலையில் உள்ளது.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக லேசான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக இப்பகுதியில் உள்ள குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு நீர் வரத்தும் அதிகரித்தது. இதனால் இப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் உழவு மற்றும் நடவு பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள கடற்கரையில் வழக்கத்திற்கு மாறாக சீற்றம் ஏற்பட்டு கடல் அலைகள் ஆக்ரோஷமாக கரைப்பகுதி நோக்கி தாக்குகிறது.
இதனால் மீனவர்கள் கடற்கரை ஓரமிருந்த தங்களது விசைப்படகுகளை மேடான பகுதிக்கு எடுத்துச் செல்கின்றனர். இதுபோல் மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீனவர் கிராமங்களில் இருக்கும் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரையில் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கீழ் புத்துப்பட்டு, அனுமந்தை, கூனி மேடு, படிச்ச மேடு, செட்டிகுப்பம், ஆட்சிக்காடு, கைப்பணி குப்பம், அழகன் குப்பம், முட்டுக்காடு குப்பம் போன்ற 19 மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் இன்று கடலுக்கு செல்லவில்லை.
மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 500 மணல் மூட்டைகள் வளர்ச்சி அலுவலர் ராமு தலைமையில் தயார் நிலையில் வைத்துள்ளார்கள்.
ஏரி, குளம், குட்டையில் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை சரி செய்ய இந்த மணல் மூட்டை தயார் நிலையில் உள்ளது. அதுபோல் சாலை துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதை சீரமைக்க இந்த 500 மணல் முட்டையை தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இந்த பகுதியில் ஏராளமான உப்பளங்கள் உள்ளது. அங்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.






