search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    5 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது- கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு
    X

    5 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தது- கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு

    • தீ விபத்தில் பொன்னுசாமி என்பவரது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே உள்ள சின்னாகவுண்டம் பாளையம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென இந்த பகுதியில் இருந்த ராஜவேல், பொன்னுசாமி ஆகியோர் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.

    இதைப்பார்த்த அனைவரும் வீட்டில் இருந்து வெளியே ஓடிவந்தனர். கொழுந்து விட்டு எரிந்த தீ அருகில் இருந்த மற்ற வீடுகளுக்கும் பரவியதால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் இது குறித்து வெப்படை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் வரிசையாக இருந்த 5 குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமானது. தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி நள்ளிரவு 12 மணிக்குத்தான் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் பொன்னுசாமி என்பவரது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த தீ விபத்தில் 5 குடிசை வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. டி.வி., பிரிட்ஜ், ஆடைகள், கட்டில், மெத்தை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தில் மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

    தீ விபத்து பற்றி தெரியவந்ததும் முன்னாள்அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ., சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் தீ விபத்தில் வீடு மற்றும் உடமைகளை இழந்து தவித்த பொதுமக்களை வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அருகில் உள்ள பள்ளியில் இரவு தங்க வைத்தனர்.

    இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா, அல்லது சமையல் செய்த போது எதிர்பாராத வகையில் தீ விபத்து நடந்ததா என்றும் வெப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×