என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் 47 ஆயிரம் மாணவர்கள் தோல்வி
- தமிழ் பாடத்தில் நிறைய மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்து இருப்பது தெரியவந்துள்ளது.
- கடந்த 2 ஆண்டுகளி்ல 8, 9-ம் வகுப்புகளில் படித்தவர்கள் தமிழ் தேர்வு எழுதவே இல்லை.
சென்னை:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் கடந்த 20-ந் தேதி வெளியிடப்பட்டது.
12-ம் வகுப்பில் 94 சதவீதமும், 10-ம் வகுப்பில் 90 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பல்வேறு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆனால் தாய்மொழியான தமிழ் பாடத்தில் 10-ம் வகுப்பில் ஒரு மாணவியும், 12-ம் வகுப்பில் 1 மாணவியும் மட்டும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தமிழ் பாடத்தில் நிறைய மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்து இருப்பது தெரியவந்துள்ளது.
தேர்வு முடிவுகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்த போது தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் தமிழ் மொழியில் மிகவும் பலவீனமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அதோடு ஏராளமான மாணவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் தேர்வில் மிக மோசமான கையெழுத்துடன் எழுதி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான ஆய்வில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 47 ஆயிரத்து 55 மாணவ, மாணவிகள் தமிழ் பாடத்தில் தோல்வியை தழுவி உள்ளனர். அதாவது மொத்த மாணவர்களில் 5.16 சதவீதம் பேர் தமிழ் பாடத்தில் வெற்றி பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு பல்வேறு காரணஙகள் தெரியவந்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக மாணவர்கள் வகுப்புகளுக்கு வராததால் மாணவ, மாணவிகளின் தமிழ் படிக்கும் திறன் வெகுவாக குறைந்துவிட்டது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தமிழில் எழுத, படிக்க தெரியாமலேயே வந்து விடுவதாக கூறப்படுகிறது. தமிழ் படிக்க தெரியாத மாணவர்களால் எப்படி 10-ம் வகுப்பில் தமிழில் தேர்ச்சி பெற முடியும் என்ற கேள்வியை ஆசிரியர்கள் எழுப்புகிறார்கள்.
பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழ் இலக்கண, இலக்கியங்களில் மிகப்பெரிய அளவில் தடுமாற்றம் இருப்பதாக ஆசிரியர்கள் சொல்கிறார்கள். இது குறித்து ஒரு ஆசிரியை கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளி்ல 8, 9-ம் வகுப்புகளில் படித்தவர்கள் தமிழ் தேர்வு எழுதவே இல்லை. எனவே வரும் ஆண்டு 10-ம் வகுப்பு தமிழ் தேர்வு முடிவுகள் மேலும் அதிருப்தி தரும் வகையில் இருக்கும் என்றார்.






