search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    200 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் உடுமலை மலைவாழ் மக்களின் போராட்டம் வாபஸ்
    X

    200 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் உடுமலை மலைவாழ் மக்களின் போராட்டம் வாபஸ்

    • மலைவாழ்மக்கள் உடுமலையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன் கடந்த 12ந் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா்.
    • 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மலைவாழ் மக்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி. இங்குள்ள அடா்ந்த வனப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

    மலைவாழ்மக்கள் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ்மக்கள் உடுமலையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன் கடந்த 12ந் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். இதில் 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

    போராட்டத்தின்போது மலைவாழ் மக்கள் தங்களுக்கான உணவை அங்கேயே சமைத்தும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பெ.சண்முகம் தலைமையிலும், மாநில மலைவாழ் மக்கள் சங்கத் துணைத் தலைவா் செல்வம், எஸ்.ஆா்.மதுசூதனன் ஆகியோா் முன்னிலையிலும் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதையடுத்து போராட்டக்காரா்களுடன் வனத்துறையினா் 4 கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் வனத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் போராட்டக் குழுவோடு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    இதில், முதல்கட்டமாக மலைவாழ் மக்களின் 200 ஆண்டு கோரிக்கையான திருமூா்த்தி மலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைத்து கொள்ள அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனா்.

    தளி பேரூராட்சி மூலமாக இதற்காக விரைவில் நிதி ஒதுக்கி டெண்டா் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இதர கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மலைவாழ் மக்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனா்.

    Next Story
    ×