என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஏப்ரல் 14-ந் தேதி அண்ணாமலை திருச்செந்தூரில் நடைபயணம் தொடங்குகிறார்
    X

    ஏப்ரல் 14-ந் தேதி அண்ணாமலை திருச்செந்தூரில் நடைபயணம் தொடங்குகிறார்

    • மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி கடலூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
    • எங்கு பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி கொடிகள், பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

    கடலூர்:

    ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் நடைபெறும் பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை கடலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. மாநில மேலிடபார்வையாளர் ரவி தலைமை தாங்கினார். கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சந்திரன், மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, நடிகை நமீதா, பொருளாதார பிரிவு மாநில தலைவரும், அன்னை பாத்திமா கல்வி நிறுவனங்களின் குழும தலைவருமான எம்.எஸ்.ஷா மற்றும் மாநில பார்வையாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    ராமர் பாலம் பாதிக்காமல் சேது கால்வாய் திட்டம் அமைப்பது, கட்சி வளர்ச்சிப்பணி குறித்து விரிவாக ஆலோசிப்பது, புதுக்கோட்டையில் நடந்த பட்டியலின கொடுமைக்கு தி.மு.க. அரசு பொறுப்பேற்க வலியுறுத்துவது, ஏப்ரல் 14-ந் தேதி அண்ணாமலை திருச்செந்தூரில் இருந்து நடைபயணம் தொடங்குவது என்பது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டம் இன்று மாலை வரை நடக்கிறது. அப்போது ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது, யாத்ரா பவனி, கட்சி பணிகள் குறித்து மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார்.

    மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி கடலூர் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி கொடிகள், பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக கடலூர் வந்த மாநில தலைவர் அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×