search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தால் 12 ஆயிரம் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகம் சேதம்
    X

    வெள்ளத்தால் 12 ஆயிரம் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகம் சேதம்

    • ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக புத்தகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழை வெள்ளத்தால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொருட்கள், உடமைகள் என அனைத்தும் சேதம் அடைந்தன. தாழ்வான ஒரு சில பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் கடுமையான பாதிப்புக்கு ஆளானார்கள்.

    இந்த நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் படிப்படியான வெள்ளநீர் வடிய தொடங்கியதும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். ஒரு வாரம் விடுமுறைக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும் ஒரு சில பள்ளிகளில் வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் திறக்க முடியவில்லை.

    மேலும் மாணவர்களின் பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், பை போன்றவை சேதம் அடைந்து இருந்தால் புதிதாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி பள்ளி திறந்த அன்று பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் பற்றிய விவரங்கள் எடுக்கப்பட்டன. அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக புத்தகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன.

    அதன்படி சென்னை மாவட்டத்தில் 12 ஆயிரம் மாணவர்களின் பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் 3000 பேரின் பை சேதம் அடைந்து இருந்தது தெரியவந்தது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், பை போன்றவை நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தார். திறக்கப்படாமல் இருந்த பள்ளிகளும் தற்போது செயல்பட்டு வருகின்றன.

    Next Story
    ×