search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாலையோரத்தில் தோண்டப்படும் பள்ளத்தால் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிவு
    X

    சாலையோரத்தில் தோண்டப்படும் பள்ளத்தால் 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிவு

    • மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட உள்ளது.
    • மெட்ரோ பணிக்காகவும், மழை நீர் வடிகால் பணிக்காகவும் சாலையோரம் பள்ளங்கள் தோண்ட்படுகின்றன.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி ரூ.61 ஆயிரத்து 843 கோடி செலவில் 3 வழித்தடங்களில் அமைக்கப்பட உள்ளது. 118.9 கி.மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதை 43 கி.மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதையில் அமைகிறது. மொத்தம் 48 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட இரக்கிறது. சுரங்கப் பாதை தோண்டுவதற்காக 23 எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

    பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பணி மற்றும் மழை நீர் கால்வாய் பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் சாலையோரம் உள்ள மரங்கள் வலுவிழந்து சரியும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை கே.கே.நகரில் கடந்த மாதம் 24-ந்தேதி சாலையில் சென்ற கார் மீது மரம் சரிந்து விழுந்த விபத்தில் வங்கி பெண் மேலாளர் ஒருவர் பலியானார். மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் காரணமாக மரம் சரிந்து விழுந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    தற்போது மெட்ரோ ரெயில் பணிக்காக பல இடங்களில் சுரங்கப் பாதை தோண்டும் பணி நடை பெற்று வருவதால் மரங்களையும், அதன் வேர்களையும் பாதித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழும் அபாயகரமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

    வெங்கட்நாராயணா சாலையில் சுமார் 20 மீட்டர் ஆழத்தில் இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சில இடங்களில் சாலையோரம் உள்ள மரங்களுக்கு அடியில் பள்ளம் தோண்டப்படுகிறது. மண் மாதிரிகளை சேகரிக்க 6 அங்குல விட்டத்தில் 30 மீட்டர் ஆழம் வரை துளையிடப்படுகின்றன.

    இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, சென்னையில் பல இடங்களில் மெட்ரோ பணிக்காகவும், மழை நீர் வடிகால் பணிக்காகவும் சாலையோரம் பள்ளங்கள் தோண்ட்படுகின்றன. இதனால் சாலையோரம் உள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் உறுதி தன்மை இழந்து சரியும் நிலையில் உள்ளது.

    மெட்ரோ ரெயில் நிறுவனம் பல இடங்களில் மரங்களுக்கு அடியில் ஆழ்துளையிட்டு மண் பரிசோதனை செய்வதால் மரங்களின் உறுதி தன்மை ஆபத்தான நிலையில் இருக்கிறது.

    மிகவும் ஆழமாக பள்ளம் தோண்டப்படுவதால் மரங்களின் வேர்கள் சேதமடைந்து விழுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. மரம் சேதம் அடைந்தால் அதனை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றார்.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, சாலை ஓரங்களில் மரங்களுக்கு சேதம் ஏற்படாமல் மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மண் பரிசோதனைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் அதிக பட்ச விட்டம் 6 அங்குலம் ஆகும். இது மரங்களையும், அதன் வேர்களையும் பாதிக்காது என்றார்.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

    கே.கே.நகரில் மரம் சாய்ந்து பெண் இறந்த சம்பவத்தை தொடர்ந்து மரங்களை பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மொத்தம் 2,302 மரங்கள் அபாயகரமானவை என்று கண்டறியப்பட்டு அவற்றின் கிளைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    சாலையோரம் ஆபத்தாக நிற்கும் மரங்கள் அருகே செல்லும் போது மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    மரங்களை பராமரிக்கவும், புதிய மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை அதிகரிக்கவும் மாநகராட்சி மும்முரம் காட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×