search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
    X

    குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

    • நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குமரி மாவட்ட மீன் சந்தைகளுக்கு இன்று மீன்வரத்து இல்லை.
    • கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் தங்களின் வருவாய் பாதித்திருப்பதாக நாட்டுப்படகு மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் மீனவர்கள் கடும் சிரமத்துடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வந்தனர்.

    இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மழைக்கு மத்தியில் பலத்த காற்றும் வீசியது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்பி மிகவும் ஆக்ரோஷமாக அடித்து வருகிறது.

    கடல் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும் குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி குமரி மாவட்டத்தில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், புதுகிராமம், மணக்குடி, கீழமணக்குடி, சிலுவை நகர் உள்ளிட்ட 10 கடற்கரை கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் தங்களுக்கு சொந்தமான நாட்டுப் படகுகள், வள்ளம், கட்டு மரங்களை கடற்கரைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். விசைப்படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருக்கின்றனர்.

    நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் குமரி மாவட்ட மீன் சந்தைகளுக்கு இன்று மீன்வரத்து இல்லை. இதனால் கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், சின்ன முட்டம் மீன் சந்தைகள் மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் தங்களின் வருவாய் பாதித்திருப்பதாக நாட்டுப்படகு மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    குளச்சலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 1000-த்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன் பிடித்து வருகிறார்கள். சில நாட்களாக குளச்சல் பகுதியில் மழை காணப்படுகிறது.

    கடலுக்குள் பலத்த காற்று அடிக்கும் காரணத்தால் சில சமயங்களில் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் அதிகமாக மீன் பிடிக்க செல்லாமல் இருக்கும். தற்போது இரு தினங்களாக குளச்சல் கடல் பகுதியில் கடலுக்குள் காற்றழுத்தம் காணப்படுவதால், காற்றின் காரணமாகவும் அதிகமான பைபர் வளங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    சில விசைப்படகுகள் இன்று கரை திரும்பின. அந்த விசைப்படகுகளில் குறைந்த அளவே கணவாய் மீன்கள் கிடைத்தன. அதை வியாபாரிகள் ஏலம் விட்டு எடுத்தனர். பைபர் வள்ளங்களில் அதிகமான மீன்கள் இன்று வரவில்லை. இதனால் இன்று மீன்கள் வரத்து குறைந்தது.

    Next Story
    ×