search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    X

    2ஜி ஊழல் என்றால் 5ஜி மெகா ஊழல்: சுப.வீரபாண்டியன் பேட்டி

    • மொத்த ஏலத்தையும் பிஎஸ்என்எல் வாங்கியிருக்கலாம் என்கிறார் சுப.வீரபாண்டியன்
    • சில நேரம் அரசியலில் சட்டென்று நிகழும் ஒரு நிகழ்வு, பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும்

    சென்னை:

    திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் மாலை மலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    2ஜி பற்றி அவ்வளவு சத்தமாக நாடு முழுவதும் குரல் கேட்டது. 5ஜி மிக மெதுவாக முணுமுணுப்பாக கூட செய்திகள் வரவில்லை. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இதற்கும் அதற்கும் இமாலய வேறுபாடு இருக்கிறது. 2ஜி என்பது 5ஜிக்கு முன்னால் வெறும் கடுகுதான்.

    2ஜி பற்றி 2008 முதல் 2010 வரை பேசாத ஊடகங்கள், பேசாத மேடைகள் இல்லை. தேர்தலுக்கும் அது பயன்படுத்தப்பட்டது. அப்போது 9400 கோடிக்குத்தான் 2ஜி ஏலம் போனது. சிஏஜி வினோத்ராய் கொடுத்த அறிக்கையில், ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் கோடிக்கு போயிருக்கவேண்டும், எனவே, அரசுக்கு ரூ.1லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று சொன்னார். 14 ஆண்டுகளுக்கு முன்னால் இது நடந்தது.

    இன்றைக்கு 5ஜி மிக நவீனமான தொழில்நுட்பம். 2ஜி-யில் நாம் பார்க்கும் படங்கள் 5ஜியில் ஒரு நொடிக்குள் கிடைக்கும் என சொல்கிறார்கள். எனவே, தரத்திலும் கூடுதல் அளவிலும் கூடுதல். 2ஜி விற்பனையானது 300 மெகா ஹெர்ஸ், இது 500 கிகா ஹெர்ஸ். எனவே, அன்றைக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியிருக்கவேண்டும் என்று சொன்னால், தரத்திலும் அளவிலும் பல மடங்கு கூடுதல் உள்ள 5ஜி, நான்கரை முதல் 5 லட்சம் கோடிக்கு விற்பனையாகியிருக்கவேண்டும். ஆனால் ஒன்றரை லட்சம் கோடிக்குத்தான் விற்பனையாகியிருக்கிறது.

    அதில் 88 ஆயிரம் கோடி முகேஷ் அம்பானி ஒருவரே வாங்கியிருக்கிறார். இன்றொருவர் 43 ஆயிரம் கோடி. அதானியெல்லாம் செலக்டிவ் பர்பசஸ் என்கிறார்கள். அவர்களுடைய சொந்த விமான நிலையம், துறைமுகத்திற்காக அதை வாங்கியிருக்கிறார்கள். ஒரு நாட்டின் சொத்து சொந்த பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் இந்த போட்டியில் இடம்பெறவே இல்லை. 1 லட்சத்து 64 ஆயிரம் கோடி பிஎஸ்என்எல்-க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்த ஏலத்தையும் பிஎஸ்என்எல் வாங்கியிருக்கலாம். ஆனால் பிஎஸ்என்எல் அந்த காட்சியிலேயே இல்லை. எனவே, இந்த நாடு யாருடைய நாடாக இருக்கிறது என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.

    குறைந்தது ரூ.4.5 லட்சம் கோடி என்று அரசாங்கமே சொன்னது. அந்த குறைந்த கணக்கை வைத்து சொன்னால்கூட, 3 லட்சம் கோடி எங்கே போனது? இது ஊழலா, மோசடியா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். 2ஜி ஊழல் என்றால் 5ஜி மெகா ஊழல். அதுதான் சரியான சொல்லாடல்.

    இந்த ஊழல் தேர்தலில் எதிரொலித்து ஆட்சி மாற்றம் வருமா? என்பதை இப்போதே கணித்து விட முடியாது. இன்னும் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகாலம் உள்ளது. பல அரசியல் மாற்றங்கள் நிகழும். சில நேரம் அரசியலில் சட்டென்று நிகழும் ஒரு நிகழ்வு பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும். பீகாரில் நடந்த மாற்றம்கூட வரவேற்கப்படவேண்டிய மாற்றம்.

    நமது முதலமைச்சருக்கு தேஜஸ்வி எழுதிய கடிதத்தில், 'இது தொடக்கமாக இருக்கட்டும், நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து இப்போது இருக்கும் மத்திய அரசை எதிர்க்க வேண்டும்' என்று எழுதியிருக்கிறார். இந்த பொறுப்புணர்வும் கடமை உணர்ச்சியும் இந்தியா முழுவதும் உள்ள எல்லோருக்கும் வரவேண்டும் என்று கருதுகிறவர்களில் நானும் ஒருவன். மாற்றம் கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×