search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு
    X

    தேவி சிலை - விநாயகர் சிலை

    40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

    • கோவிலில் திருட்டு போன தேவி சிலையையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
    • சிலையின் தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    நாகை மாவட்டம் திருக்குவளை தாலுகா திருத்துறைப்பூண்டி பண்ணத்தெருவில் பழமை வாய்ந்த பரமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெண்கல விநாயகர் சிலை திருட்டு போனது. இதுதொடர்பாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த சிலை குறித்த குறிப்புகள் கோவிலில் இல்லாததால், புதுச்சேரி கலைப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை போலீசார் அணுகினர். அங்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோவில்களின் தல வரலாற்று பதிவுகள், சாமி சிலைகள் புகைப்பட தொகுப்புகள் உள்ளன. இதில் திருட்டு போன விநாயகர் சிலையின் புகைப்படம் இருந்தது.

    அதுமட்டுமின்றி இந்த கோவிலை சேர்ந்த மேலும் 11 சிலைகளின் புகைப்படங்களும் இருந்தன. இந்த சிலைகளும் 40 ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது.

    இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய புலன் விசாரணையில், இந்த கோவிலில் திருடப்பட்ட விநாயகர் சிலை அமெரிக்காவின் நார்டன் சைமன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சிலை மதுரை ஆதீனத்துக்கு சொந்தமானது என்பதும், சர்வதேச சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த சிலையை கடத்தி விற்பனை செய்திருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சிலையின் தற்போதைய சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

    இதேபோன்று இந்த கோவிலில் திருட்டு போன தேவி சிலையையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த சிலையை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சோதேபிஸ் என்ற ஏல நிறுவனம் ரூ.39 லட்சத்து 98 ஆயிரத்து 575-க்கு அங்குள்ள அருங்காட்சியகத்துக்கு விற்பனை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து இந்த 2 சிலைகளையும் 'யுனெஸ்கோ' ஒப்பந்தத்தின் கீழ் மீட்டு, பரமேஸ்வரர் கோவிலில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கவனம் செலுத்தி உள்ளனர். மேலும் இந்த கோவிலில் கொள்ளை போன மற்ற சிலைகளை கண்டுபிடிக்கும் பணியிலும் தீவிரம் காட்டியுள்ளனர்.

    Next Story
    ×