search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீரெங்கம் கோவிலில் பக்தரை தாக்கிய கோவில் பணியாளர்கள் 3 பேர் கைது- 2 ஐயப்ப பக்தர்கள் மீதும் வழக்கு
    X

    ஸ்ரீரெங்கம் கோவிலில் பக்தரை தாக்கிய கோவில் பணியாளர்கள் 3 பேர் கைது- 2 ஐயப்ப பக்தர்கள் மீதும் வழக்கு

    • பக்தர்களை அங்கிருந்து கோவில் தற்காலிக காவலாளிகள் மற்றும் போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
    • ஸ்ரீரங்கம் போலீசார் முன் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 55 பேரை கைது செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு நேற்று காலை ஆந்திர மாநிலத்தில் இருந்து 34 ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் கோவில் மூலஸ்தானம் எதிரே உள்ள காயத்ரி மண்டபம் அருகே வரிசையில் நின்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலை ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் வேகமாக தட்டி ஒலி எழுப்பியுள்ளனர்.

    இதையடுத்து பக்தர்களை அங்கிருந்து கோவில் தற்காலிக காவலாளிகள் மற்றும் போலீசார் ஒழுங்குபடுத்தினர். இதில் ஐயப்ப பக்தர்களுக்கும் கோவில் தற்காலிக பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ் (வயது 45) என்பவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. இதனால் அவருடன் வந்த ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கோவிலுக்குள் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் நடை சாத்தப்பட்டு பின்னர் பரிகார பூஜைகள் செய்த பின்னர் 3 மணி நேரம் கழித்து தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் உதவி போலீஸ் கமிஷனர் நிவேதா லட்சுமி, இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்களை சமாதானம் செய்தனர்.

    பின்னர் ஐயப்ப பக்தர் சாந்தாராவ் சந்தா புகாரின் அடிப்படையில் கோவில் தற்காலிக பணியாளர்கள் பரத் (30), விக்னேஷ் (32), செல்வா (31) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் மீதான தாக்குதல் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருச்சி மாவட்ட இந்து முன்னணி தலைவர் போஜராஜன் தலைமையில் கோவில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். பின்னர் ஸ்ரீரங்கம் போலீசார் முன் அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உட்பட 55 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கோவில் தற்காலிக பணியாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஐயப்ப பக்தர்கள் சென்னா ராவ், சாந்தாராவ் மற்றும் சிலர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் கைகளால் தாக்குவது, தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதே பிரிவுகளில் தான் கைதான 3 பணியாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அதன் மாநில பொதுச்செயலாளர் சுந்தரவடிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த வெளி மாநில பக்தர்கள் கோவில் ஊழியர்களாலும், காவலர்களாலும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டது கண்டிக்க்கத்தக்கது. பக்தர்களை அடிமைகளாகவும், அலட்சியமாகவும் நடத்தும் அறநிலையத்துறையின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    பக்தர் ஒருவர் ரத்தம் சொட்டும் அளவுக்கு தக்கப்பட்டு, அதற்காக பரிகார பூஜை செய்யும் அளவுக்கு வன்முறை நடந்துள்ளது. இதற்கு காரணமான கோவில் பணியாளர்கள் அனைவரையும் உடனடியாக பணிநீக்கம் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×