என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர்கள் மாநாட்டில் பயன்படுத்திய தேசிய கொடி சீனாவில் தயாரிப்பு- வருத்தமாக இருந்ததாக அப்பாவு தகவல்
- இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் தேசிய கொடிகளை ஏந்தியபடி சென்றோம்.
- சீனாவில் இருந்து தேசிய கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சென்னை:
காமன்வெல்த் 65-வது சபாநாயகர்கள் மாநாடு கனடாவில் ஹாலிபேக்ஸ் நகரில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு சபாநாயகர்கள், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
இந்தியாவில் இருந்து பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, தமிழக சபாநாயகர் அப்பாவு ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
மாநாட்டு வளாகத்துக்கு சபாநாயகர்கள் சென்றபோது தங்கள் நாட்டு தேசிய கொடியை ஏந்தியபடி பேரணியாக சென்றனர். இந்திய சபாநாயகர்கள் கையில் பிடித்திருந்த தேசிய கொடியில் 'மேட் இன் சீனா' என்ற வாசகம் இடம் பெற்று இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
இந்தியாவின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் தேசிய கொடிகளை ஏந்தியபடி சென்றோம். அந்த கொடிகளில் 'மேட் இன் சீனா' என்று இருந்தது. அதை கண்டு பாராளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தோம்.
எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது. சீனாவில் இருந்து தேசிய கொடியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியாவில் குறிப்பாக சிவகாசி, ஈரோடு, கரூர், நாமக்கல் பகுதிகளில் நிறைய பிரஸ்கள் உள்ளன. இரவு சொன்னால் காலையில் 100 கொடியை தருவார்கள். ஆனால் இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தெரியவில்லை என்றார்.






