search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விலை கிலோவுக்கு ரூ.1,800 குறைந்தது- வெள்ளி பொருட்கள் ஆர்டர்கள் குறைந்ததால் தொழிலாளர்கள் கவலை
    X

    விலை கிலோவுக்கு ரூ.1,800 குறைந்தது- வெள்ளி பொருட்கள் ஆர்டர்கள் குறைந்ததால் தொழிலாளர்கள் கவலை

    • வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப தொழில் இருக்கும்.
    • உக்ரைன் போரால் ரஷியாவில் இருந்து வெள்ளி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுகள், அரைஞான் கொடி உள்பட வெள்ளி பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சேலம் செவ்வாய்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர்.

    வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப தொழில் இருக்கும். தற்போது போதிய ஆர்டர் கிடைக்காமல் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ளி விலை ஒரே நாளில் 1800 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் வெள்ளி ஆபரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று முன்தினம் வெள்ளி கிராம் 79.30 ரூபாய், பார் வெள்ளி கிலோ 79 ஆயிரத்து 300-க்கு விற்பனையானது. நேற்று வெள்ளி கிராமுக்கு 1.80 குறைந்து 77.50 ரூபாய், பார் வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு 1800 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.

    சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்ட இறக்கம் மற்றும் டாலர் மதிப்பு குறைவு உள்பட காரணங்களால் வெள்ளி விலை குறைந்துள்ளது. விலை குறையும்போது இன்னும் விலை குறையும் என கருதி மக்கள் வெள்ளி வாங்குவதை தவிர்த்து விடுகிறார்கள். இதனால் தொழில் மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை சங்க தலைவர் ஆனந்த ராஜன் கூறியதாவது,

    ரஷியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து அதிக அளவில் வெள்ளி கிடைக்கப்பெற்று சர்வதேச மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. ரஷியாவில் இருந்து மட்டும் வெள்ளி வரத்து 40 சதவீதம் இருக்கும். உக்ரைன் போரால் ரஷியாவில் இருந்து வெள்ளி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது. இது மட்டுமின்றி சர்வதேச நிலவரங்கள் அடிப்படையில் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே வெள்ளி பொருட்கள் ஆர்டர் கிடைக்கவில்லை. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கிடைத்த 25 சதவீத ஆர்டர்களுக்கு மட்டும் பட்டறைகள் இயங்குகின்றன. 75 சதவீதம் வரை ஆர்டர்கள் குறைவால் பட்டறைகள் பாதி நாட்கள் மூடப்படுகின்றன.

    இந்த நிலையில் திடீரென பார் வெள்ளி விலை சரிந்துள்ளதால் மேலும் தொழில் வீழ்ச்சி அடையும் நிலை உள்ளதால் வெள்ளி பொருட்கள் விற்பனையாளர்கள், வெள்ளி நகை தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×