என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குமரியில் கடல் சீற்றம்- இன்று முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
    X

    குமரியில் கடல் சீற்றம்- இன்று முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    • மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
    • கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும் மாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

    இதனால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடல் பகுதிகளில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதையடுத்து குமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பு குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மூலமாக கடற்கரை கிராமங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீனவர்கள் இன்று முதல் மூன்று நாட்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்ற தகவல் பங்கு தந்தைகள் மற்றும் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் மூலமாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவிப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் நாட்டுப் படகுகள் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்பும் மாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று கடல் சீற்றமாகவும் காணப்பட்டது. ராட்சத அலைகள் வேகமாக எழும்பியது. கடற்கரை ஒட்டியுள்ள தடுப்புச் சுவர்கள் மீது வேகமாக மோதி சென்றது.

    Next Story
    ×