search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 மாவட்டங்களில் ஒரு வார விடுமுறைக்கு பிறகு பள்ளி-கல்லூரிகள் நாளை திறப்பு
    X

    4 மாவட்டங்களில் ஒரு வார விடுமுறைக்கு பிறகு பள்ளி-கல்லூரிகள் நாளை திறப்பு

    • சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன.
    • பள்ளி-கல்லூரி கட்டிட சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாத அளவுக்கு தடுப்புகளை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    மழை வெள்ள பாதிப்பால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகள் கடந்த 4-ந் தேதி முதல் மூடப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேங்கி நின்ற மழை வெள்ளம் வடிந்துள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதையடுத்து ஒரு வார விடுமுறைக்கு பிறகு நாளை (11-ந் தேதி) பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

    இதையொட்டி கடந்த 2 நாட்கள் 4 மாவட்டங்களிலும் பள்ளி-கல்லூரிகளை சுத்தப்படுத்தி குப்பைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன. இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளில் ஆசிரியர்-ஆசிரியைகள் மற்றும் துப்புரவு பணியாளர்களை வரவழைத்து பள்ளி வளாகத்தில் தேங்கி கிடந்த குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. லாரிகள் மூலமாக இந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

    பள்ளி தலைமை ஆசிரி யர்களின் மேற்பார்வையில் நடைபெற்று வரும் துப்புரவு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் அமரும் இருக்கைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.

    இப்படி சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள் திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. மின்சாதன பெட்டிகளும் சரிபார்க்கப்பட்டு மின்கசிவு ஏதும் ஏற்படுகிறதா? என்பதையும் பள்ளி கல்லூரி ஊழியர்கள் சரிபார்த்துள்ளனர். இது தொடர்பாக தேவையான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனது பள்ளி கல்வி துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி-கல்லூரிகளை திறப்பதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக பள்ளி கல்வி துறை சார்பில் சுற்றறிக்கையும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    பள்ளி-கல்லூரி கட்டிட சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாத அளவுக்கு தடுப்புகளை அமைக்க வேண்டும். கதவு, ஜன்னல், பெஞ்ச் போன்றவற்றை கிருமி நாசினிகள் மூலமாக சுத்தம் செய்ய வேண்டும் என்பது போன்ற விஷயங்கள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி மேற்கண்ட பணிகளில் பெரும்பாலானவற்றை பள்ளி-கல்லூரி நிர்வாகத்தினர் முடித்துள்ளனர். இதை தொடர்ந்து ஒருவார விடுமுறை முடிந்து பள்ளி-கல்லூரிகள் நாளை வழக்கம் போல் செயல்பட உள்ளன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்து கீழ் தளத்தில் வெள்ளம் புகுந்ததால் பாட புத்தகங்கள், சீருடைகள் சேதமடைந்துவிட்டன.

    இப்படி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புதிய பாடப் புத்தகங்கள், சீருடைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக சிறப்பு முகாம்கள் நாளை நடைபெற உள்ளது. தொடர் விடுமுறைக்கு பிறகு நாளை பள்ளிகள் திறக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×