search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரத்திற்கு படகில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தலில் 4 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
    X

    ராமேசுவரத்திற்கு படகில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தலில் 4 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

    • இலங்கைக்கு கடத்திச் செல்லும் போதை பொருட்களுக்கு பணத்தை இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேரடியாக படகோட்டியிடம் கொடுக்க மாட்டார்கள்.
    • ஏழை, எளிய மீனவர்கள் மத்தியில் பணத்தாசையைத் தூண்டி அவர்களைக் கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்பட கடலோர மாவட்டங்கள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு போதைப்பொருள் உள்ளிட்டவை தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன. தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் சர்வதேச கடல் எல்லை வழியாக சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகம் நடைபெறுகிறது.

    இதனை தடுக்க இந்திய கடலோர காவல்படைக்குச் சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல்கள் மணல்திட்டு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வான்வெளியிலும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள், முழு வீச்சில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறது.

    இந்த நிலையில் நேற்று இலங்கையில் இருந்து ராமேசுவரத்துக்கு கடத்தி வந்த 9 கிலோ தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.6 கோடியாகும். இது தொடர்பாக தங்கச்சிமடத்தை சேர்ந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலுக்கு பயன்பட்ட 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். சமீபகாலமாக அதிக அளவு கடத்தல் சம்பவங்கள் நடந்து வருவது பெரும் சவாலாக உள்ளது.

    இதற்கிடையே இதுபோன்ற கடத்தல் தொழிலுக்கு ஏழை, எளிய மீனவர்களை கடத்தல்காரர்கள் மூளை சலவை செய்து மீன்பிடி படகுகளை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறுதான் இலங்கையில் இருந்து போதைப் பொருட்களைக் கச்சிதமாக கடத்தி செல்வதும், பதிலுக்கு தங்கம் கடத்தி வருவதும் தொடர்கிறது.

    ராமேசுவரம் கடல் பகுதியில் நடக்கும் கடத்தல் குறித்து விசாரித்தபோது, குறைந்த நாட்களில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் வசதி படைத்தவர்கள் கூட கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், தமிழக கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி விடும் பொருட்களை நடுக்கடலில் நிற்கும் இலங்கை படகிற்கு கை மாற்றி விட்டால் மட்டும் போதும், குறிப்பிட்ட பணம் அல்லது தங்கம் கைமாறாக கொடுத்துவிடுவார்கள்.

    அந்த வகையில்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மீறி சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்குள் படகில் பல கோடி மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:-

    சில நேரங்களில் கடற்படை துரத்தும்போது சில படகுகள் நடுக்கடலில் கவிழ்ந்து படகில் செல்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இலங்கையில் இருந்து இத்தனை கிலோ கஞ்சா தேவை என்ற தகவல் முதலில் குறுஞ்செய்தியாக வரும். ஆனால் இப்போது வாட்ஸ்அப் அழைப்பு மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. இந்த அழைப்பை போலீசார் இடைமறித்துக் கேட்க முடியாது என்பதால் அதன் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.

    இலங்கைக்கு கடத்திச் செல்லும் போதை பொருட்களுக்கு பணத்தை இலங்கையைச் சேர்ந்தவர்கள் நேரடியாக படகோட்டியிடம் கொடுக்க மாட்டார்கள். கஞ்சாவுக்கு பணத்தை தமிழகத்தில் உள்ள சில நபர்களின் தொடர்பு எண்ணைக் கொடுத்து அவர்களைத் தொடர்பு கொண்டு பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு சொல்வார்கள். அந்த எண்ணைத் தொடர்பு கொண்டால், குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி அங்கு வைத்து அந்தப் பணத்தை வாங்கி கொள்வது பழக்கமாக இருந்து வருகிறது.

    ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொலைபேசி எண்கள், வெவ்வேறு நபர்களிடம் இருந்து பணம் பெற்று கொள்வார்கள். ஆனால் பல நேரங்களில் பணத்திற்குப் பதிலாக அதற்கு நிகரான மதிப்பு கொண்ட தங்க கட்டிகள் இலங்கையிலிருந்து கொடுத்து விடப்படும். பண நெருக்கடியில் இருக்கும் ஏழை, எளிய மீனவர்கள் மத்தியில் பணத்தாசையைத் தூண்டி அவர்களைக் கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது வேதனைக்குரியது.

    பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மீறி சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்குள் படகில் தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தில் மண்டபம் அருகே வேதாளையை சேர்ந்த நபர்கள் சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்பதால் அவர்களது வீடுகள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    Next Story
    ×