search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீட்டுமனை அனுமதிக்கு லஞ்சம்: பஞ்சாயத்து தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை-  2 பேர் சிறையில் அடைப்பு
    X

    மணிகண்டன் - ஆனந்தன்

    வீட்டுமனை அனுமதிக்கு லஞ்சம்: பஞ்சாயத்து தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- 2 பேர் சிறையில் அடைப்பு

    • பட்டணம் பட்டியில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் நண்பரான ஆனந்தன் என்பவரிடம் வழங்கும்படி மணிகண்டன் தெரிவித்தார்.
    • மணிகண்டன் மற்றும் ஆனந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சென்னையை சேர்ந்தவர் கார்த்திக்கேயன், இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள எர்ணாபுரம் ஜெய்புரி கிராமத்தில் 5.5 ஏக்கர் நிலத்தை வாங்கி 120 வீட்டு மனைகளாக பிரித்தார்.

    அந்த வீட்டு மனைகளுக்கு டி.டி.சி. அனுமதி பெற வேண்டி மகுடஞ்சாவடி பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார். இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவியின் கணவரான மணிகண்டனை நாடினார். அவர் வீட்டுமனையில் சதுர அடிக்கு 50 வீதம் மொத்தம் ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுத்தால் அனுமதி கொடுப்பதாக தெரிவித்தார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத கார்த்திக்கேயன் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜனிடம் புகார் கொடுத்தார். அவரது அறிவுரையின் பேரில் நேற்று கார்த்திக்கேயன் முதற்கட்டமாக ரூ.5 லட்சம் லஞ்சமாக கொடுப்பதாக தெரிவித்தார்.

    அதனை பட்டணம் பட்டியில் உள்ள முனியப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் நண்பரான ஆனந்தன் என்பவரிடம் வழங்கும்படி மணிகண்டன் தெரிவித்தார். அதன்படி நேற்று கார்த்திக்கேயன் பணத்தை கொண்டு சென்று ஆனந்தனிடம் கொடுத்தார். இதுகுறித்து அவர் மணிகண்டனை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

    இதையடுத்து அவர் அங்கு வந்து சிறிது நேரத்தில் 5 லட்சத்தை வாங்கினார். அப்போது அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. கிருஷ்ணராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் மணிகண்டனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வேறு எங்காவது வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

    விசாரணைக்கு பின்பு மணிகண்டன் மற்றும் ஆனந்தன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மணிகண்டன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். தொடர்ந்து இரவு 8 மணியளவில் 2 பேரையும் தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க அழைத்து செல்ல முயன்றனர். அப்போது மணிகண்டனின் உறவினர்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். மணிகண்டனின் தங்கை பேபி போலீஸ் வாகனம் முன்பு அமர்ந்து கோஷமிட்டார். இதையடுத்து பேபியை அப்புறப்படுத்தி விட்டு மணிகண்டன் மற்றும் ஆனந்தனை போலீசார் சேலத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் நள்ளிரவு 11.30 மணியளவில் 2 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×