என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் திருடப்பட்ட கார் கயத்தாரில் மீட்பு: 2 பேர் கைது
    X

    கைது செய்யப்பட்ட கருப்பசாமி, நாகராஜ்.

    சென்னையில் திருடப்பட்ட கார் கயத்தாரில் மீட்பு: 2 பேர் கைது

    • கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் கயத்தாறு சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • பல்லாவரம் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசாரிடம் கைது செய்யப்பட்டவர்களை கயத்தாறு போலீசார் ஒப்படைத்தனர்.

    கயத்தாறு:

    சென்னை சிறுகளத்தூர் அருகே உள்ள குன்றத்தூரை சேர்ந்தவர் செந்தில். (வயது 40). இவருக்கு சொந்தமான காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து அவர் பல்லாவரம் போலீசில் புகார் செய்தார்.

    இந்நிலையில் கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி திலீப் மற்றும் போலீசார் கயத்தாறு சோதனை சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தினர். ஆனால் அந்த காரை ஓட்டி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் காரை நிறுத்தாமல் வேகமாக காரை ஓட்டிச்சென்றனர். சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த காரை பின் தொடர்ந்து சென்று விரட்டிப் பிடித்தனர்.

    தொடர்ந்து அந்த காரில் வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் தாமரைமொழி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி (வயது 26), தட்டார்மடம் பிள்ளை யார்கோவில் தெருவை சேர்ந்த நாகராஜ்(31) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், அந்த கார் சென்னையில் திருடுபோன கார் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார் கைது செய்யப்பட்டவர்களையும், காரையும் கயத்தாறு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து பல்லாவரம் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசாரிடம் கைது செய்யப்பட்டவர்களை கயத்தாறு போலீசார் ஒப்படைத்தனர். மேலும் உரிய ஆவணங்களை காட்டியதால் செந்திலிடம் கார் ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×