என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைப்பு
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
- டெல்டா பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீரின் தேவை குறைந்துள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 800 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலையும் அதே அளவில் நீடிக்கிறது.
அதேசமயம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 145 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 121 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெல்டா பகுதிகளில் மழை பெய்து வருவதால், நீரின் தேவை குறைந்துள்ளது.
இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு, நேற்று மதியம் முதல் விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 90.45 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 89.51 அடியாக சரிந்துள்ளது.






