search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2-வது நாளாக கடலுக்கு செல்ல தடை: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
    X

    2-வது நாளாக கடலுக்கு செல்ல தடை: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

    • மண்டபம் தெற்கு துறைமுகம், பாம்பன் தெற்கு வாடி துறைமுகப்பகுதி, ராமேசுவரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.
    • 2 நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடி அளவில் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்:

    தமிழகத்தின் தென் மாவட்டங்களையொட்டி உள்ள வங்கக்கடலில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும். குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை கடற்காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்திருந்தது.

    இதன் காரணமாக நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. 2-வது நாளாக இன்றும் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

    இதனால் கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், மாரியூர், முந்தல் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

    மண்டபம் தெற்கு துறைமுகம், பாம்பன் தெற்கு வாடி துறைமுகப்பகுதி, ராமேசுவரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை. மாவட்டத்தில் மொத்தம் 1750 விசைப்படகுகளும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் கடற்கரையில் 2-வது நாளாக ஓய்வெடுத்தன.

    வானிலை மாற்றம் காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    2 நாட்களில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.10 கோடி அளவில் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஒவ்வொரு முறை மீன்பிடிக்க செல்லும்போது பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறோம்.

    குறிப்பாக இலங்கை கடற்படையினரின் தொல்லை காரணமாக 100 சதவீத அளவில் மீன்பிடிக்க முடிவதில்லை. தற்போது வானிலையும் சாதகமாக இல்லாததால் 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் குடும்பம் நடத்த வருமானமின்றி தவிக்கிறோம் என்றனர்.

    Next Story
    ×