search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருகிய குறுவை நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- ராமதாஸ்
    X

    கருகிய குறுவை நெற்பயிர்கள்: ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- ராமதாஸ்

    • வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன.
    • இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன.

    ஆனால், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், கர்நாடக அணைகளில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே குறுவைப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இயற்கை கை கொடுத்தாலோ, உச்சநீதிமன்றம் நீதி வழங்கினாலோ, குறுவை பயிர்களை பெரிய அளவில் பாதிப்பின்றி காப்பாற்றி விடலாம் என்று உழவர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் எல்லா வாய்ப்புகளும் நழுவி விட்டன; நம்பிக்கைகள் பொய்த்து விட்டன.

    காவிரி பாசன மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது.

    காவிரியில் தண்ணீர் இல்லாததால் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட பகுதிகளிலும் கூட தண்ணீர் பற்றாக்குறை காரணமாக போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வரும் வேளாண்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் கூட, உறுதியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு ஏமாற்றமளித்திருக்கிறது.

    கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் என்.எல்.சி நிறுவனத்தால் குறுவை பயிர்கள் அழிக்கப்பட்டபோது ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. அதையே அளவுகோலாகக் கொண்டு தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×