search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க.வுடன் நாங்களும் சமரசம் செய்யமாட்டோம்- பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    பொன் ராதாகிருஷ்ணன்

    தி.மு.க.வுடன் நாங்களும் சமரசம் செய்யமாட்டோம்- பொன்.ராதாகிருஷ்ணன்

    • தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • தி.மு.க. அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா? அதற்காக தற்போது செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை மதிக்கப்பட வேண்டும். தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி அ.தி.மு.க. நிர்வாகிகள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என நம்புகிறேன். இன்னொரு கட்சிக்கு ஆலோசனை சொல்லக்கூடிய அளவிற்கு நான் இல்லை. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட கட்சி என்றும், எப்போதும் அப்படியே திகழ்வதற்கான வாய்ப்பு வரும் என நம்புகிறேன்.

    தி.மு.க. தரப்பில் பா.ஜ.க.வுடன் குறைந்தபட்ச சமரசம்கூட கிடையாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் எதற்காக ஏன் இதை சொல்லி இருக்கிறார் என தெரியவில்லை. நாங்களும் அவர்களோடு சமரசம் செய்யமாட்டோம். தமிழக மக்களும் தி.மு.க.விடம் சமரசம் செய்ய தயாராக இல்லை. தமிழக மக்களுக்காக தி.மு.க.வை எதிர்த்து போராடுவதற்கு பா.ஜ.க. எப்போதும் தயாராக உள்ளது.

    அமைச்சர் வாகனம் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் போலீசார் எந்த அடிப்படையில் கைது செய்துள்ளார்கள் என தெரியவில்லை. இதேபோல் எல்லா விஷயத்திலும் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளார்களா? இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

    கடந்த 2017-ம் ஆண்டு சேலத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் படித்தபோது உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து அப்போது மத்திய மந்திரியாக இருந்த நான், அவரது உடலை மீட்டு சேலத்தில் ஒப்படைத்துவிட்டு திரும்பியபோது என் மீதும் செருப்பு வீசப்பட்டது. எனது காரிலும் தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது.

    தி.மு.க. அப்போது என்னை மந்திரியாக நினைக்கவில்லையா? அதற்காக தற்போது செருப்பு வீசியதை சரி என நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அது சரியானது அல்ல. ஆனால் அமைச்சர் மீதே வீசி இருக்கிறார்கள் என்று சொன்னால், அன்று நானும் மந்திரியாக இருந்தபோதுதான் என் மீது செருப்பு வீசப்பட்டது. அப்போது அதனை நான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஒரு ஆவேசத்தில் மக்கள் இருக்கும்போது அதனை பெரிய மனதோடு விலகிச்செல்ல வேண்டும். மந்திரி மீது மட்டுமல்ல, சாதாரண மனிதன் யார் மீதும் செருப்பு வீசக்கூடாது.

    கன்னியாகுமரி மாவட்டம், தேங்காபட்டணம் துறைமுகத்தில் இதுவரை 27 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த துறைமுகத்தில் நிரம்பி இருக்கக்கூடிய மணலை எடுக்க வேண்டும். அதன் பணிகளை தமிழக அரசு விரைவாக முடிக்க வேண்டும். அதற்கான உதவிகளை மத்திய அரசு செய்ய தயாராக உள்ளது. சீன உளவு கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. எல்லையை கண்காணிப்பதில் எந்த அளவிற்கு மற்றவர்கள் தயாராக இருக்கிறார்களோ, அதேபோல இந்திய எல்லையை பாதுகாப்பதில் நம்முடைய நாடும் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட தலைவர் கதிரவன், மாநில நிர்வாகிகள் சுப.நாகராஜன், ஆத்மா கார்த்திக், மாவட்ட பொருளாளர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    Next Story
    ×