search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிணத்தை வைத்து அரசியல் செய்வது வாடிக்கையாகிவிட்டது... அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்
    X

    பிணத்தை வைத்து அரசியல் செய்வது வாடிக்கையாகிவிட்டது... அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்

    • வழக்கு தொடர்பாக முறையான விசாரணை நடைபெறுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தகவல்
    • மாணவனின் உடலை நாளை காலை 10 மணிக்குள் பெற்றோர் வாங்கி இறுதி மரியாதை செய்ய உத்தரவு

    மதுரை:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். எனது இரண்டாவது மகன் சீனு கடையநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். பள்ளியில் உள்ள ஆசிரியர்களால் பல இன்னல்களை அனுபவித்து வந்தான். சாதி ரீதியான கொடுமையெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது. என் மகன் கல்வியில் மிகவும் ஆர்வமாக உள்ள மாணவன். கடந்த 14ம் தேதி சில ஆசிரியர்களால் எனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஆனால் அவன் எனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதுபோல சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்த சாவில் மர்மம் இருக்கிறது.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் என் அனுமதியின்றி பிரேத பரிசோதனை நடத்தியிருக்கிறார்கள். பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றுவதற்காக இதையெல்லாம் செய்திருக்கிறார்கள். எனவே, எனது மகனின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேணடும்.

    இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருக்கிறார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, மருத்துவ குழு அமைத்துதான் மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் வழக்கு தொடர்பாக முறையான விசாரணை நடைபெறுகிறது என்றும் குறிப்பிட்டார். உடலை வாங்க மறுப்பதால் தினமும் 600க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    இதையெல்லாம் கேட்ட நீதிபதி, சமீப காலமாக பிணத்தை வைத்து அரசியல் செய்வது வாடிக்கையாகிவிட்டது, அதற்கு உதாரணம் கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கு என கூறினார்.

    மேலும், கடையநல்லூர் மாணவன் மரணம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதால், மாணவனின் உடலை நாளை காலை 10 மணிக்குள் பெற்றோர் வாங்கிக்கொண்டு இறுதி மரியாதை செய்ய வேண்டும், தவறும்பட்சத்தில் மாவட்ட நிர்வாகம், மாணவனின் உடலை தகனம் செய்யலாம் என கூறி, வழக்கை தென்மண்டல காவல் தலைவர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள அதிகாரியை வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    Next Story
    ×