search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு: குற்றாலத்தில் குளிக்க 3-வது நாளாக தடை
    X

    பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு: குற்றாலத்தில் குளிக்க 3-வது நாளாக தடை

    • மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
    • மாஞ்சோலை பகுதியில் 3-வது நாளாக கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு நேற்று முன்தினம் 300 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று 2000 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 5,029 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கி உள்ளது.

    நேற்று 90 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 96.70 அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 807 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. அந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 11.8 சென்டிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    இதேபோல் 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை கடந்த நிலையில் இன்று மேலும் 8 அடி உயர்ந்து 108.07 அடியானது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 90.40 அடியாக உள்ளது. அந்த அணைக்கு 70 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று நீர்வரத்து 801 கனஅடியாக அதிகரித்துள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மணிமுத்தாறு அருவியில் 2-வது நாளாக இன்றும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மாஞ்சோலை பகுதியில் 3-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. காக்காச்சியில் 5 சென்டிமீட்டரும், ஊத்து மற்றும் நாலுமுக்கு எஸ்டேட் பகுதியில் தலா 4 சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தை பொறுத்தவரை கன்னடியன், சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது. அம்பையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அவ்வப்போது சாரல் மழை பெய்கிறது. ராதாபுரம் தாலுகாவில் பலத்தமழை பெய்தது. இன்று காலையில் ஒருசில இடங்களில் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 33 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாநகர பகுதியில் நேற்று பெய்த மழையினால் ஒருசில இடங்களில் சாலையில் தேங்கிய தண்ணீர் வடியாமல் உள்ளது. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறி உள்ளது. அவற்றை தற்காலிகமாக சீரமைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக மழை நீடித்து வருகிறது. அதிகபட்சமாக ஆய்க்குடியில் 5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.

    அங்குள்ள மெயினருவி, பழையகுற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளத்தை தூரத்தில் நின்றபடி ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். தொடர்ந்து இன்று 3-வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ள தால் அய்யப்ப பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    அணை பகுதிகளை பொறுத்தவரை கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் 25 மில்லிமீட்டரும், குண்டாறில் 18.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. தொடர்மழையின் காரணமாக கடனா அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 71.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 79.25 அடியாகவும் உள்ளது.

    குண்டாறு அணையில் 34.50 அடி நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் கோவில் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 63 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நெல் மற்றும் வாழை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×