search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிப்பு- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை
    X

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவிப்பு- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மரியாதை

    • ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘இ நூலகத்தை’ அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
    • நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திருச்செந்தூர்:

    பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுசேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்து, முத்திரை பதித்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பில் மணி மண்டபம் திறக்கப்பட்டது.

    மேலும் அவரது பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 24-ந் தேதி ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டா டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் இன்று அவரது பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

    அரசு சார்பில் மணிமண்டபத்தில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணைத்தலைவர் செங்குழி ரமேஷ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில் மணி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 'இ நூலகத்தை' அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    இதில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜன், கல்லூரி நிறுவன செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காயாமொழி ஊர் பொது மக்கள் சார்பாக ஓய்வு பெற்ற கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பால சுப்பிரமணிய ஆதித்தன் தலைமையில் வரதராஜ ஆதித்தன், ராஜன் ஆதித்தன், ராமகிருஷ்ணன் ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொழில் அதிபர் தண்டு பத்து ஜெயராமன் மகன்களான ரகுராம், சிவராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நாம் இந்தியர் கட்சி சார்பாக மாநில பொருளாளர் பேரூரணி ஜெயகணேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் மாநில தொழிற் சங்க தலைவர் சரவண குமார், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் உடையார், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், துணை செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், வேல்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ் பெருமாள், துணை செயலாளர் பால முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×