search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெண்கள் இடஒதுக்கீட்டில் 2 தடைகளை மத்திய அரசு வைத்துள்ளது: ப.சிதம்பரம்
    X

    பெண்கள் இடஒதுக்கீட்டில் 2 தடைகளை மத்திய அரசு வைத்துள்ளது: ப.சிதம்பரம்

    • 2026-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினாலும், இந்த பணி முடிய 2028-ம் ஆண்டு வரை ஆகும்.
    • மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பா.ஜனதா அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை, விருப்பமும் இல்லை.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டுக்கான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

    மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது மாநிலங்கள் அவையில் இந்த மசோதா நிறைவேறியது. அதே வரைவு மசோதாவை நிறைவேற்றி ஒப்புதல் வாங்கி இருந்தால் 2024 தேர்தலுக்கே இச்சட்டம் அமலுக்கு வந்திருக்கும். ஆனால் பா.ஜனதா அரசு வேண்டுமென்றே 2 தடைகளை வைத்துள்ளது.

    ஒன்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மற்றொன்று தொகுதிகளை மறுவரையறை செய்வது.

    எனவே இச்சட்டம் 2024 தேர்தலில் மட்டுமல்ல, 2029 தேர்தலிலும் கூட அமலுக்கு வராது. காரணம் அரசியல் சாசனத்தில் 88-வது பிரிவில் 3-வது உட்பிரிவில் 2026-ம் ஆண்டிற்கு பிறகே மக்கள்தொகை கணக்கெடுப்பு என கூறப்பட்டுள்ளது.

    2026-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினாலும், இந்த பணி முடிய 2028-ம் ஆண்டு வரை ஆகும். அதன்பிறகு அடுத்த தடையாக தொகுதியை மறுவரையறை செய்ய வேண்டும். இதற்கு பாராளுமன்றத்தில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளையும் மறுவரை செய்ய வேண்டும் என்பது கடினமான பணியாகும். எனவே இச்சட்டம் நிச்சயம் அமலுக்கு வராது.

    மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் பா.ஜனதா அரசுக்கு உண்மையான அக்கறை இல்லை, விருப்பமும் இல்லை.

    543 தொகுதிகளிலும் மக்கள்தொகை அடிப்படையிலான மறு வரையறை செய்யப்பட்டால் தென் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையவும், வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

    2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்ததும் தவறு. அதனை செல்லாது என்று அறிவித்ததும் தவறு.

    இந்தியா கூட்டணியில் பிளவு என்பதே கிடையாது. நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி முறிவு ஒரு பக்கம் மகிழ்ச்சியும், மறுபக்கம் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. காவிரி பிரச்சினையில் இரு மாநிலத்தவரும் அவரவர் கோரிக்கையை வலியுறுத்துவர்.

    தேசிய மருத்துவ ஆணையம் தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க அனுமதி இல்லை என்றும், ஏற்கனவே செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்க இயலாது என உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×