என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நார் மில் சக்கரத்தில் சிக்கி 1½ வயது குழந்தை உயிரிழப்பு
- தாயின் மடியில் இருந்து கீழே இறங்கி தவழ்ந்து சென்ற குழந்தை தீஷ்குமார், அங்கு ஓடிக்கொண்டிருந்த நார் மில் எந்திரத்தின் அருகே சென்றான்.
- எதிர்பாராத விதமாக குழந்தை அணிந்திருந்த சட்டை, நார் மில் எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி உள்ளே இழுத்தது.
பரமத்திவேலூர்:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பஞ்சுராம் (வயது 36). இவரது மனைவி மனிஷா தேவி. இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் பரமத்தி வேலூர் அருகே ஓலப்பாளையத்தில் உள்ள பிரபாகரன் என்பவரது தேங்காய் மட்டையில் இருந்து நார் பஞ்சு பிரித்து எடுக்கும் நார் மில்லில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
பஞ்சுராம் வழக்கம் போல் நேற்று மாலை நார் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரை பார்க்க வந்த மனைவி மனிஷாதேவி, அவர்களது 1½ வயது ஆண் குழந்தை தீஷ்குமாரையும் அழைத்து வந்துள்ளார்.
கணவன், மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, தாயின் மடியில் இருந்து கீழே இறங்கி தவழ்ந்து சென்ற குழந்தை தீஷ்குமார், அங்கு ஓடிக்கொண்டிருந்த நார் மில் எந்திரத்தின் அருகே சென்றான்.
அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை அணிந்திருந்த சட்டை, நார் மில் எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி உள்ளே இழுத்தது. இதில் படுகாயம் அடைந்த தீஷ்குமார் அலறினான்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட பெற்றோர், தீஷ்குமார் எந்திரத்தில் சிக்கியதை பார்த்து பதறினர். ஓடிச்சென்று குழந்தையை காப்பாற்றி, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தீஷ்குமார் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்ட பெற்றோர் கதறி அழுதனர்.
இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 1½ வயது குழந்தை நார் மில்லில் உள்ள எந்திரத்தின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






